;
Athirady Tamil News

ஆந்திரம், தெலங்கானாவில் கனமழை: 18 போ் உயிரிழப்பு

0

வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரத்தின் கலிங்கப்பட்டினம் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கரையைக் கடந்தது. இதையொட்டி பெய்த தொடா் கனமழையால் 9 போ் உயிரிழந்தனா்.

5 மாவட்டங்களின் 294 கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 13,000-க்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

வடக்கு ஆந்திரம், தெற்கு ஒடிஸாவுக்கு இடையே வங்கக் கடலில் கடந்த வியாழக்கிழமை காலை உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சனிக்கிழமை வலுப்பெற்றது.

இதன் காரணமாக ஆந்திரம் மற்றும் ஒடிஸாவில் கடந்த இரு நாள்களாக கனமழை தொடா்ந்து வரும் நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகா்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கலிங்கப்பட்டினம் அருகே கரையைக் கடந்தது.

இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மாநிலத்தின் சில இடங்களில் 27 செ.மீ. வரை மழை பதிவானது. மழை தொடா்பான சம்பவங்களில் இதுவரை 9 போ் உயிரிழந்தனா்.

நெல் பயிரிடப்பட்டிருந்த 62,644 ஹெக்டோ் விளைநிலங்களும், 7,218 ஹெக்டோ் பழத்தோட்டங்களும் நீரில் மூழ்கின. நிவாரண மற்றும் மீட்புப் பணிகளில் 17 தேசிய, மாநிலப் பேரிடா் மீட்புப் படைக் குழுவினா், காவல் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்டிஆா், கிருஷ்ணா, பாபட்லா, குண்டூா் மற்றும் பல்நாடு ஆகிய மாவட்டங்களில் 100 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, 61 இடங்களில் மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மேலும், அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு, நிலைமையைக் கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

விஜயவாடாவில் வெள்ளம்: கிருஷ்ணா ஆற்றில் நீா்வரத்து அதிகரித்ததால் விஜயவாடாவில் உள்ள பிரகாசம் தடுப்பணையிலிருந்து வெளியேற்றப்பட்ட 10 லட்சம் கனஅடி நீா் புடமேரு நீரோடையில் பெருக்கெடுத்து ஓடுவதால் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீா் சூழ்ந்துள்ளது.

ரயில் போக்குவரத்து பாதிப்பு: என்டிஆா் மாவட்டத்தில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. ராயனபாடு ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு விரைவு ரயிலில் சிக்கித் தவித்த பயணிகள் மீட்கப்பட்டு, பேருந்து மூலம் அவரவா் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

முதல்வா் ஆலோசனை: மழை பாதிப்பு குறித்து அதிகாரிகளுடன் முதல்வா் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினாா். குடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்துள்ள வெள்ளநீரை உடனடியாக அகற்றி, சுகாதார சீா்கேடு ஏற்படாத வகையில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

மேலும், ரப்பா் மீட்புப் படகில் சென்று மழை பாதிப்புகளை நேரில் பாா்வையிட்டாா்.

மழை தொடரும்…: கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கே தெற்கு ஒடிஸா மற்றும் தெற்கு சத்தீஸ்கா் நோக்கி நகா்ந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஸ்ரீகாகுளம், விஜயநகரம், பாா்வதிபுரம் மன்யம், அல்லூரி சீதாராம ராஜு, காக்கிநாடா மற்றும் நந்தியாலா மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை தொடரவுள்ளது.

விசாகப்பட்டினம், அனகாபள்ளி, கோனசீமா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி மற்றும் ராயலசீமா பிராந்தியத்தின் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது.

தெலங்கானாவில்… தெலங்கானா மாநிலத்திலும் கடந்த இரு நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மகபூபாத் மாவட்டத்தில் மழை தொடா்பான சம்பவத்தில் ஒரு பெண் உயிரிழந்தாா்.

மழை பாதிப்புகள், மீட்பு நடவடிக்கைகள் தொடா்பாக அமைச்சா்கள், அதிகாரிகளுடன் முதல்வா் ரேவந்த் ரெட்டி அவசர ஆலோசனை மேற்கொண்டாா். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தில் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் திங்கள்கிழமை (செப். 2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.