சவாலை ஏற்றே களமிறங்கி இருக்கிறேன்: நாமல் எடுத்துரைப்பு!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சவால்களை ஏற்றே தாம் களமிறங்கி இருப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த நாமல், “ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என்று நான் எண்ணி இருக்கவில்லை. பொறுப்பு கிடைக்கும் போது அதனை ஏற்க வேண்டும். அரசியல்வாதிக்கு அந்த பண்பு இருப்பது அவசியம்.
நவீன சிந்தனை
நெருக்கடி நேரத்தில் களமிறங்க வேண்டும். நாடு நன்றாக இருக்கும் போது நான் அரசியல் ரீதியாக நன்றாக பிரபலமடைந்திருக்கும் போது பொறுப்பை ஏற்பதில் பயனில்லை. இவ்வாறான நெருக்கடி நேரத்தில் எம்மை போன்ற இளைஞர்கள் நவீன சிந்தனைகளை கொண்டவர்கள் களத்துக்கு வருவது அவசியம்.
அந்த வகையில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு நான் மரபுரீதியிலிருந்து வெளியே செல்வேன். அத்துடன், என்னுடைய நோக்கம் மிகத் தெளிவானது. இந்த நாட்டின் ஒற்றுமையை ஒருமைப்பாட்டை பாதுகாப்பேன்.
சகல இன மக்களினதும் கலாசாரங்களை பாதுகாப்பேன். சில தலைவர்கள் அதிகார பகிர்வு தொடர்பில் பேசுகின்றார்கள். ஆனால் கலாச்சாரங்களை அழிக்கின்றனர். சில சட்டங்களைக் கொண்டு வந்து கலாச்சார மரபுகளை அழிக்கின்றனர்.
ஆனால் நான் சகல மக்களினதும் கலாசாரங்களையும் பாரம்பரிய மரபுகளையும் விழுமியங்களையும் பாதுகாப்பேன் என்று உறுதி வழங்குகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.