தள்ளிப்போகிறதா தவெக மாநாடு? காரணம் என்ன? விஜய் எடுக்க உள்ள முடிவு
தவெக மாநாடு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.
சமீபத்தில் பனையூரில் உள்ள கட்சி தலைமை தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியை வெளியிட்டார். முதல் மாநாட்டில் கட்சி கொள்கைகள் அறிவிக்கப்படும் என விஜய் தெரிவித்ததால் முதல் மாநாடு எப்போது நடைபெறும் எங்கு நடைபெறும் என பலத்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
விக்கிரவாண்டி மாநாடு
இதனையடுத்து விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை கிராமத்தில் செப்டம்பர் 23 ஆம் தேதி மாநாடு நடத்த அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க கோரி தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், காவல் துறையிடம் மனு அளித்தார். இதனைத்தொடர்ந்து அந்த இடத்தில், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் சென்று இடத்தை ஆய்வு செய்தனர்.
விழுப்புரம் மாவட்ட காவல் ஆணையர் தீபக் சிவாச் விடுமுறையில் இருப்பதால் தற்போது வரை மாநாட்டிற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் மாநாட்டில் கலந்து கொள்ள போகும் பிரபலங்கள் விவரம், நிகழ்ச்சி நிரல், மேடையின் அளவு உள்ளிட்ட 21 கேள்விகள் எழுப்பிய காவல் துறை, 5 நாட்களில் பதில் அளிக்க நோட்டீஸ் வழங்கியுள்ளது.
மாநாடு நடத்தும் இடம் நெடுஞ்சாலை அருகில் உள்ளதாகவும், அனுமதி கடிதத்தில் சாலையின் இருபுறமும் வாகனத்தை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். தொண்டர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு, மாநாடு நடந்து முடியும் வரை, சாலையை கடப்பதுமாக இருப்பார்கள் என்பதால், பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படும். இதற்கு முன்பு இதே இடத்தில் திமுக மாநாடு நடந்துள்ளதாகவும் அப்பொழுதே கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என கருதும் காவல்துறை அனுமதி வழங்க யோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜோதிடருடன் ஆலோசனை
மேலும் தி.மு.க அமைச்சர்கள் வெளிப்படையாகவே விஜய்யின் அரசியல் வருகையை விமர்சித்து வருவதால் அனுமதி கிடைப்பது சிக்கல் எனவும் கூறப்படுகிறது. அவ்வாறு அரசியல் அழுத்தத்தால் காவல் துறை அனுமதி மறுத்தால் நீதிமன்றம் சென்று சட்ட போராட்டம் நடத்தி அனுமதி வாங்கும் முடிவிலும் தவெக உள்ளது.
மேலும் மாநாட்டிற்கு அனுமதி கிடைப்பது சந்தேகமாக உள்ள நிலையில் பொதுச்செயலாளர் ஆனந்த் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரை சந்தித்து மாநாடு தள்ளிப்போனால் வேறு எந்த தேதியில் நடத்தலாம் என ஆலோசித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அக்டோபர், நவம்பர், டிசம்பர் மழைக்காலம் என்பதால் அந்த மாதங்களில் மாநாடு நடத்துவது சரியாக இருக்காது என விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மாநாட்டை தள்ளி வைத்தால் ஜனவரி மாதத்திற்கு மேல் நடத்த வாய்ப்புள்ளதாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.