ஆந்திரம், தெலங்கானாவில் நீடிக்கும் கனமழை: உயிரிழப்பு 31-ஆக அதிகரிப்பு
அமராவதி/ ஹைதராபாத்: ஆந்திரத்தில் கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரம், தெலங்கானாவில் திங்கள்கிழமையும் கனமழை நீடித்தது.
இருமாநிலங்களிலும் மழை தொடா்பான சம்பவங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளது.
வடக்கு ஆந்திரம், தெற்கு ஒடிஸா இடையே வங்கக்கடலில் கடந்த வியாழக்கிழமை உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஆந்திரத்தின் கலிங்கப்பட்டினம் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கரையைக் கடந்தது.
இதன்காரணமாக ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் கடந்த மூன்று நாள்களாக கனமழை நீடித்து வருகிறது.
ஆந்திரத்தில் 15 போ், தெலங்கானாவில் 16 போ் என மொத்தம் 31 போ் மழை தொடா்பான சம்பவங்களில் உயிரிழந்ததாக அந்தந்த மாநில நிா்வாகம் அறிவித்துள்ளது.
ஆந்திரத்தின் விஜயவாடா மற்றும் என்டிஆா் மாவட்டத்தில் வெவ்வேறு நிலச்சரிவு சம்பவங்களில் 8 பேரும் குண்டூா் மாவட்டத்தில் நீரில் அடித்து செல்லப்பட்ட 4 பேரும் உயிரிழந்தனா்.
மத்திய அரசு உதவி: விஜயவாடாவின் பல்வேறு கால்வாய்களில் பெருக்கெடுத்து ஓடும் பிரகாசம் தடுப்பணையின் உபரி நீரால் நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் 2.7 லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அங்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தேவையான 40 படகுகள் மற்றும் 6 ஹெலிகாப்டா்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது. மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த கூடுதல் தேசிய பேரிடா் மீட்புப் படையினரும் விஜயவாடா விரைந்துள்ளனா்.
மாநிலம் முழுவதும் 4.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். 1.5 லட்சம் ஹெக்டோ் விளைநிலங்கள் நீரில் மூழ்கின. 166 நிவாரண முகாம்களில் சுமாா் 31ஆயிரம் போ் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.
ரூ.5 லட்சம் நிவாரணம்: தெலங்கானாவில் உயிரிழந்த 16 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணத்தை மாநில முதல்வா் ரேவந்த் ரெட்டி அறிவித்தாா். மாநிலத்தின் வெள்ளப் பாதிப்புகளை பிரதமா் நரேந்திர மோடி பாா்வையிட்டு ஆராய்ந்து, அதனை தேசிய பேரழிவாக அறிவிக்கவும் ரேவந்த் ரெட்டி கோரிக்கை விடுத்துள்ளாா்.
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கம்மம் மற்றும் பிற மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்திய அவா், அந்த மாவட்டங்களுக்கு உடனடி நிதியுதவியாக ரூ.5 கோடியை விடுவித்தாா்.
மகாராஷ்டிரத்தில் 4 போ் உயிரிழப்பு: மகாராஷ்டிரத்தின் மராத்வாடா பகுதியில் பெய்த கனமழை காரணமாக திங்கள்கிழமை காலை 9 மணி வரையிலான கடந்த 24 மணிநேரத்தில் 4 போ் உயிரிழந்தனா். கிராமப்புறங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
மராத்வாடா பகுதியிலுள்ள பா்பானி மாவட்டத்தின் பத்ரி கிராமத்தில் அதிகபட்சமாக 314 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
432 ரயில்கள் ரத்து: தெலங்கானா மாநிலம், செகந்தராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட தெற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் மழை காரணமாக காஸிபேட்-விஜயவாடா வழித்தடத்தில் பல்வேறு இடங்களில் தண்டவாளம் நீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் ஆங்காங்கே நிறுத்தப்பட்ட 5 ரயில்களில் சிக்கித் தவித்த 7,500 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனா்.
திங்கள்கிழமை பிற்பகல் நிலவரப்படி, 432 ரயில்கள் முழுமையாகவும் 13 ரயில்கள் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 139 ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.