தமிழ்ப் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு
புதிய இணைப்பு
தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் அலுவலகத்தில் இன்று(03.09.2024)தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு இடம்பெற்றது.
தென்னிலங்கை வேட்பாளர்களை நிராகரித்து தமிழ்ப் பொதுவேட்பாளர் ஊடாக தமிழர்கள் தேர்தலை எதிர்கொள்வதற்கான அவசியம், புறநிலை, முக்கியத்துவம் என்பவற்றையும் தமிழர்கள் தேசமாக தமது நிலைப்பாட்டினை அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களில் ஆணித்தரமாக வெளிப்படுத்தும் வகையில் தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பினரால் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர், சி.வி. விக்னேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பல அரசியல் மற்றும் பொது அமைப்புகளின் பிரமுகர்கள் கலந்துக்கொண்டிருந்தனர்.
முதலாம் இணைப்பு
தமிழ்ப் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று(03.09.2024) யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் சார்பில் முன்னாள் எம்.பி பா.அரியநேத்திரன் தமிழ்ப் பொது வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார்.
இனப் பிரச்சினை
ஜனாதிபதி வேட்பாளர்கள் பலரும் தற்போது தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வருகின்ற நிலையில் தமிழ்ப் பொது வேட்பாளரின் விஞ்ஞாபனமும் இன்று யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படவுள்ளது.
இந்த விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வு உட்பட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், தேவைகள் பலவும் உள்ளடக்கப்பட்டு இருக்கின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்தத் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் சிவில் சமூகப் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.