;
Athirady Tamil News

13 பிளஸ் தொடர்பாக தமிழரசு கட்சியும் சஜித்தும் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் : அங்கஜன் இராமநாதன்

0

13 பிளஸ் தொடர்பாக தமிழரசு கட்சியும் சஜித் பிரேமதாசவும் தமிழ் சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இனப் பிரச்சினைக்கான தீர்வாக 13 பிளஸை தருவதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உறுதியளித்திருப்பதாக கடந்த திங்கட்கிழமை முல்லைத்தீவில் நடைபெற்ற சஜித் பிரேமதாசவின் பிரசார கூட்டத்தில் அவரின் முன்பாக தமிழரசு கட்சி பிரதிநிதி ஒருவர் கூறினார்.

இதனை அதே மேடையில் இருந்த சஜித் பிரேமதாசவும் நிராகரிக்கவில்லை. நான் ஒரு தமிழன் என்ற வகையில் இதனை வரவேற்கின்றேன். ஆனால், சஜித் பிரேமதச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதனை குறிப்பிடவில்லை.

இரகசிய உடன்படிக்கை
ஆகவே, சஜித் பிரேமதச தமிழரசு கட்சியுடன் செய்துகொண்டுள்ள ஒரு இரகசிய உடன்படிக்கையின் பிரகாரமாகவே இந்த உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டிருந்திருக்கலாம். ஆனால், 13 பிளஸ் என்பது எல்லையற்றது.

ஆகவே, இந்த பிளஸ் தமிழீழம் வரையா அல்லது சமஷ்டி வரையா என்ற அதன் எல்லையற்ற தன்மையை திரு சஜித் பிரேமதாச அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் சிங்கள மக்களுக்கு முன்பாக அவர் மேடையில் இதனை குறிப்பிடவேண்டும் என்றும் நான் கோரிக்கை விடுக்கின்றேன்.

அவ்வாறு அவர் இதனை சிங்கள மக்களுக்கு முன்பாக உறுதிப்படுத்துமிடத்து தமிழ் மக்களின் நன்மை கருதி நானும் சஜித் பிரேமதச அவர்களுக்கு ஆதரவு அளிப்பதற்கு தயாராக இருக்கின்றேன்.

அதேவேளை, தமிழரசு கட்சியும் சஜித் பிரேமதாசாவுடன் 13 பிளஸ் தொடர்பில் எட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் இணக்கம் தொடர்பில் தெளிவுபடுத்தவேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கின்றேன்.

அவ்வாறு, சஜித் பிரேமதாச அவர்களும் தமிழரசு கட்சியும் 13 பிளஸ் பற்றி விபரங்களை உறுதிசெய்வதற்கு தவறுமானால் அதனை பொய்களை கூறி தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்தபின்னர், நடுத்தெருவில் அவர்களை நிற்கவைக்கும் ஏமாற்று நடவடிக்கை என்றே இதனை கருத வேண்டும்.

ஆகவே, சஜித் பிரேமதசவின் உறுதிமொழிகள் தொடர்பிலும் தமிழரசுக்கட்சியின் நிலைப்பாடு தொடர்பிலும் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.