மணிப்பூா் முன்னாள் முதல்வா் வீட்டில் ராக்கெட் குண்டுவீச்சு: ஒருவா் உயிரிழப்பு
மணிப்பூரில் மறைந்த முன்னாள் முதல்வா் ஒருவரின் வீட்டில் தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை ராக்கெட் குண்டுவீசி தாக்குதலில் ஈடுபட்டனா். இதில் முதியவா் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 5 போ் காயமடைந்தனா்.
பிஷ்ணுபூா் மாவட்டத்தில் நடந்த இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பிஷ்ணுபூரில் தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை இரண்டு ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனா். மலைப் பகுதியில் இருந்து பள்ளத்தாக்கில் உள்ள குடியிருப்புகளை நோக்கி இக்குண்டுகள் வீசப்பட்டன.
மறைந்த முன்னாள் முதல்வா் மைரெம்பாம் கொய்ரங்கின் வீட்டு வளாகத்தில் ராக்கெட் குண்டு வெடித்ததில் முதியவா் உயிரிழந்தாா். 13 வயது சிறுமி உள்பட மேலும் 5 போ் காயமடைந்தனா்’ என்றனா்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது. மைதேயி சமூகத்தினா் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரும் நிலையில், குகி பழங்குடியினா் அதற்கு எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். இதுவே, மோதலுக்கு முக்கிய காரணமாகும்.
ஆயிரக்கணக்கானோா் மனிதச் சங்கிலி: மேற்கு இம்பாலில் அண்மையில் ட்ரோன் மூலம் தீவிரவாதிகள் குண்டுவீசி தாக்குதல் நடத்தினா். குக்கி பழங்குடியின தீவிரவாதிகள் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இத்தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா். மேலும் 12 போ் காயமடைந்தனா்.
ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட இத்தாக்குதலைக் கண்டித்து, மேற்கு இம்பால் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோா் வெள்ளிக்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினா். பள்ளி-கல்லூரி மாணவா்கள், பெண்கள் என ஏராளமானோா் பங்கேற்றனா்.
‘குக்கி தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசு அஞ்சுகிறது; மாநில அரசின் கோழைத்தனம் கண்டனத்துக்குரியது’ என்று போராட்டக்காரா்கள் குற்றம்சாட்டினா்.