;
Athirady Tamil News

ஹத்ராஸ்: பேருந்து விபத்தில் 17 பேர் பலி!

0

உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸில் வேன் மீது பேருந்து மோதிய விபத்தில் 17 பேர் பலியாகினர்.

உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் கன்வர்பூர் கிராமத்திற்கு அருகே ஆக்ரா-அலிகர் தேசிய நெடுஞ்சாலையில், ஹத்ராஸில் இருந்து ஆக்ராவுக்கு, வெள்ளிக்கிழமை மாலையில் சிலர் வேனில் பயணம் செய்துள்ளனர்.

அந்த சமயத்தில், வேனின் பின்னிருந்து வந்த பேருந்து, வேனை முந்திச்செல்ல முயன்றுள்ளது. ஆனால், எதிர்பாராத விதமாக, வேன்மீது பேருந்து மோதி, விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த, நான்கு பெண்கள், பல குழந்தைகள் உள்பட 17 பேர் வரையில் உயிரிழந்தனர்.

இந்த விபத்து மிகவும் பயங்கரமாக இருந்ததால், பேருந்தில் இருந்த பயணிகள் சிலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்று நிவாரண நடவடிக்கைகளை கவனிக்குமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டதுடன், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் நிதியுதவி வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரும் இரங்கல் தெரிவித்தும், காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.