சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் : சஜித் அறிவிப்பு
சிறிலங்கா அரசாங்கம் அக்கறை செலுத்தியிருந்தால் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (Colombo) நேற்று (06) இடம்பெற்ற நுண், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுடனான கலந்துரையாடலின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”எமது நாட்டின் தேசிய உற்பத்திக்கு 50 வீதத்துக்கு அதிகமான பங்களிப்பை வழங்குகின்ற சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் தொழில் முனைவோர்கள் குறித்து அவதானம் செலுத்தப்படுகின்ற முதல் சந்தர்ப்பம் இதுவல்ல.
நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியுள்ளோம்
2020 இல் ஆரம்பம் முதலே சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களும் தொழில் முனைவோர்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் குரல் எழுப்பி உள்ளோம்.
அதனால்தான் இந்த பிரச்சினையை முறையான கலந்துரையாடலின் பக்கம் இட்டுச்செல்ல முடிந்துள்ளதோடு, அரசாங்கத்தினதும் பொறுப்புக்கூறக் கூடியவர்களின் கொள்கை திட்டங்களை வகுக்கின்றவர்களின் அவதானத்தின் பாலும் இட்டுச்செல்ல முடிந்துள்ளது.
இந்தத் துறை குறித்து அக்கறை செலுத்துகின்ற வர்த்தகர்களுடன் பல சந்தர்ப்பங்களில் நான் கலந்துரையாடி இருக்கின்றேன்.
நாடு வங்குரோத்தடைந்தமையினால் ஏதேனும் ஒரு வகையில் நிவாரணங்களை வழங்குகின்ற சர்வதேச நாணய நிதியத்தை (IMF) சந்திக்க முடியாமல் இருந்தபோது எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் ஊடாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) இந்த நாட்டுக்கான பிரதானியையும், உலக வங்கியையும் (World Bank), சர்வதேச நாணய நிதியத்தின் ஐரோப்பிய சங்கத்திற்கான தூதுவர்களிடம் நேரடியாக எமது பிரச்சினையை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது.
இந்த அரசாங்கம் செய்யாததை ஐக்கிய மக்கள் சக்தி (SJB) செய்திருக்கின்றது. சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் வீழ்ந்திருந்திருக்கின்ற பாதாளத்தில் இருந்து மீட்டெடுப்பதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஊடாக 100 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள முடியுமாக இருந்தது.
பொருளாதார அபிவிருத்தி
எதிர்க்கட்சி என்ற வகையில் இதனைப் பெற்றுக் கொள்வதற்கு அனுசரணையாளராக செயற்பட முடிந்ததது. அத்தோடு இதனை விடவும் அரசாங்கம் இன்னும் அக்கறை செலுத்தி இருந்தால், இந்நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு முக்கியமான ஆதாரமாக இருக்கின்ற சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்காக அதிகமாக ஏதேனும் செய்திருக்கலாம்.அது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டி இருந்த போதும் அன்று அதனை காண முடியவில்லை. இன்றும் அதேபோன்று சந்தர்ப்பவாதத்தை வைத்தே செயற்படுகின்றது. உண்மையான வெளிப்படை தன்மையும் உணர்வும் அரசாங்கத்திடம் இல்லை.
இது குறித்து அரசாங்கத்திடம் கூறியபோது அவர்களுக்காக தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியாது. வங்கி கட்டமைப்பே வீழ்ச்சி அடையும் என அரசாங்கம் கூறியது.
வங்கிக் கட்டமைப்பின் சேமிப்பாளர்களாக இந்த வர்த்தகர்களே இருக்கின்றார்கள். இவர்களினால் வங்கிக் கட்டமைப்பு இலாபம் அடைந்தாலும், அதனை மறந்த அரசாங்கம் இவர்களை நிராகரித்தது” என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.