;
Athirady Tamil News

நாட்டை சீரழித்து பிளவை ஏற்படுத்தியவர்கள் ராஜபக்சக்களே : சஜித் பகிரங்கம்

0

ராஜபக்சக்களே இந்த நாட்டை சீரழித்து நாட்டிற்குள் பிளவை ஏற்படுத்தியிருக்கின்றார்கள் என எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஹோமாகமவில் (Homagama) ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 36ஆவது மக்கள் வெற்றி பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”ரணில் விக்ரமசிங்கவும் (Ranil Wickremesinghe), அநுர குமார திசநாயக்கவும் (Anura Kumara Dissanayake) புதிய அரசியல் திருமண விருந்து உண்ணுகின்றார்கள். இவர்கள் இருவருக்கும் நாட்டைக் கட்டி எழுப்ப வேண்டிய தேவை இல்லை.

நாட்டை சீரழித்தவர்கள்
இவர்களில் ஒருவருக்கு மக்களின் இதயத்துடிப்பு தெரிவதில்லை. 220 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்பு ஆசை, துன்பம், வேதனை, என்பவற்றையும் அறிவதில்லை. இவர்களில் மற்றவர் அனைத்தையும் சீரழிக்கின்ற எரியூட்டுகின்ற சமூக படுகொலைகளை முன்னிலைப்படுத்தி செயற்படுகின்றவர்.

200 ஆடைத் தொழிற்சாலைகளை உருவாக்குகின்ற பணி முன்னெடுக்கப்பட்ட போது துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பிரேமதாச உருவாக்கும் ஆடை தொழிற்சாலைகளை தீயிட்டு கொளுத்துவதாக எச்சரிக்கை விடுத்தவர்.

இந்த நாட்டை ராஜபக்சர்கள் சீரழித்து இந்த நாட்டிற்குள் பிளவை ஏற்படுத்தியிருக்கின்றார்கள். நாட்டை தீயிட்டு கொளுத்துகின்றவர்களுக்கு, கொலைகளை செய்கின்றவர்களுக்கு இந்த நாட்டைக் கட்டி எழுப்ப முடியாது.

அச்சம் ஏற்பட்டுள்ளது
ரணில் விக்ரமசிங்கவுக்கும் அநுர குமார திசாநாயக்கவிற்கும் ஐக்கிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வந்து நாட்டிற்கு சேவை செய்யும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் பிரிகோடு தெளிவாக விளங்குகின்றது. இந்த நாட்டிலுள்ள 220 இலட்சம் மக்களும் ரணில் விக்ரமசிங்கவினதும், அநுர குமார திசாநாயக்கவினதும் அரசியல் கூட்டை சரியாக விளங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் இருவரினது நோக்கம் சஜித் பிரேமதாசவை தோல்வி அடையச் செய்வதாகும்.

அவர்களின் நோக்கம் அப்படி இருந்தாலும், எமதும் ஐக்கிய மக்கள் சக்தியினதும், ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் பொதுவான நோக்கம் வீழ்ச்சி அடைந்திருக்கின்ற இந்த நாட்டை இந்த மிகப்பெரிய அனர்த்தத்தில் இருந்து மீட்டெடுத்து, சுபிட்சமான நாளைய தினத்திற்காக 220 இலட்சம் மக்களையும் முன்னெடுத்துச் செல்வது“ என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.