அரச உத்தியோகத்தர்களின் பெரும்பான்மையானவர்களின் வாக்கு ரணிலுக்கு: வெளியாகியுள்ள தகவல்
அரச உத்தியோகத்தர்களின் பெரும்பான்மையானவர்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) வாக்களித்துள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார்.
மொரவக்க பிரதேசத்தில் நேற்று (06.09.2024) நடைபெற்ற “இயலும் சிறிலங்கா” பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், ”பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 191 மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் (SJB) இணைந்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னிலையில் ரணில்
ஆனால் மாத்தறை (Matara) மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவின் 196 உள்ளூராட்சி சபை உறுப்பினர்களே உள்ளனர்.
பொதுஜன பெரமுனவில் 8 மாகாண சபை உறுப்பினர்கள் இருந்தனர். அவர்களில் 90 வீதமான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், ரணில் விக்ரமசிங்கவுடன் தான் உள்ளனர்.
சவால்களை ஏற்காது ஓடியவர்கள் எதிர்காலத்தில் பிரச்சினைகள் வந்தால் எம்மை காப்பாற்றுவார்கள் என்று நம்ப முடியுமா. ஐக்கிய மக்கள் சக்தி பல துண்டுகளாக உடைந்துள்ளது.
கண்டியில் (Kandy) ஒரு கொள்கையை வெளியிடுகிறார்கள். கொழும்பில் (Colombo) வேறொன்றை வெளியிடுகிறார்கள்” என தெரிவித்தார்.