;
Athirady Tamil News

நாடாளுமன்றத்தை கலைக்கப் போவதில்லை!! வெளியான ரணில் தரப்பின் முக்கிய அறிவிப்பு

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்ததன் பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்க போவதில்லை ஏனெனில் பொருளாதார மீட்சிக்காவும், சமூக கட்டமைப்பின் முன்னேற்றத்துக்காவும் எடுத்துள்ள தீர்மானங்களை முன்னெடுக்க தற்போதைய அரசாங்கம் தொடர வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நெருக்கடியில் கல்வித் துறை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நெருக்கடியான சூழலில் அரசாங்கத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்கும் போது கல்வி அமைச்சராக நான் நியமிக்கப்பட்டேன். அப்போதைய காலக்கட்டத்தில் கல்வித்துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. தேசிய பரீட்சைகள் உரிய காலத்தில் நடத்தப்படாமல் பிற்போடப்பட்டிருந்தது. கல்வித்துறையை மீண்டும் சீர் செய்ய முடியுமா என்ற பாரிய பிரச்சினை எழுந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் கல்வித்துறையில் நிலவிய பிரச்சினைளுக்கு கட்டம் கட்டமாக தீர்வு கண்டுள்ளோம். வடக்கு மாகாண உட்பட அனைத்து மாகாணங்களுக்கும் ஆசிரியர் நியமனங்களை வழங்கியுள்ளோம். பாடசாலை சீறுடைகள் மற்றும் பாடப்புத்தகங்களை வழங்கியுள்ளோம்.

யாழ்ப்பாண மக்களுக்கு முதலாவதும், இரண்டாவதும், மூன்றாவதும் கல்வி என்பதை உறுதியாக குறிப்பிட வேண்டும். கல்வித்துறையில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் மக்கள் விடுதலை முன்னணியினர் தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுத்தார்கள்.

ஆசிரியர் – அதிபர் சேவையில் நிலவும் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி விசேட குழுவை நியமித்தார். இந்த குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்குமா..
இதற்கமைய எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அரச சேவையாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும். முதலாம் தர சேவை ஆசிரியர்களின் சம்பளம் 38 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்படும்.

அதேபோல் முதலாம் தர சேவை அதிபர்களின் சம்பளம் 39 ஆயிரம் ரூபாவினாலும் அதிகரிக்கப்படும். புதிதாக நியமனம் பெறும் டிப்ளோமா தர ஆசியர்களின் சம்பளம் 17 ரூபாவினாலும், பட்டதாரி ஆசிரியர்களின் சம்பளம் 19 ஆயிரம் ரூபாவினாலும் 2025 ஜனவரி முதல் அதிகரிக்கப்படும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்க போவதில்லை. நாடாளுமன்றத்துக்கு பதவி காலம் உள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்க வேண்டும்.

வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை செயற்படுத்துவதற்கு நிர்வாக கட்டமைப்பின் ஊடாக தீர்மானங்களை எடுக்க வேண்டும் அதற்கு தற்போதைய அரசாங்கம் தொடர வேண்டும்.

தான் வெற்றிப் பெற்றவுடன் நாடாளுமன்றத்தை கலைப்பதாக அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிடுகிறார். நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்த 2 மாதங்களேனும் செல்லும்.

அப்படி நடந்தால் 2025 ஜனவரி சம்பளத்தை அதிகரிக்க முடியுமா,? ஆசிரியர் – அதிபர் சேவையின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை. சஜித் பிரேமதாச 24 சதவீதத்தால் சம்பளத்தை அதிகரிப்பதாக குறிப்பிடுகிறார். ஆனால் நாங்கள் 24 சதவீதத்தில் இருந்து 54 சதவீதம் வரை சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு காண அவதானம் செலுத்தி உரிய நடடிக்கைகளை எடுத்துள்ளோம்.

இது தேர்தல் வாக்குறுதியோ அல்லது இலஞ்சமோ அல்ல , இரண்டு ஆண்டு கால பொருளாதார மீட்சியின் பிரதிபலன் என குப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.