;
Athirady Tamil News

சஜித் ஆட்சியில் காணி உரிமை மற்றும் வீட்டுத்திட்டம் உறுதி: பழனி திகாம்பரம் தெரிவிப்பு

0

மலையக மக்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளையும் சஜித் ஆட்சியில் நாம் நிச்சயம் பெறுவோம். காணி உரிமை மற்றும் வீட்டுத்திட்டம் என்பன நிறைவு செய்யப்படும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும், எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, நுவரெலியா – தலவாக்கலையில் 08.09.2024 அன்று மதியம் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

இதில் உரையாற்றும் போதே திகாம்பரம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

“ எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலே நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கப்போகின்ற தேர்தலாகும்.

சஜித் பிரேமதாச, ரணில் விக்ரமசிங்க மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகிய மூவரும் பிரதான வேட்பாளர்களாக உள்ளனர். இவர்களில் நாம் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்றோம்.

சஜித் பிரேமதாச என்பவர் நேர்மையான தலைவர். அவர் மக்களுக்கு வழங்கும் வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றக்கூடியவர். சஜித் ஆட்சியில் நாம் நிச்சயம் அமைச்சராவோம். எமது மக்களுக்கு தேவையான உரிமை மற்றும் அபிவிருத்திகளை நிச்சயம் பெற்றுக்கொடுப்போம்.

நான் மடக்கும்புர தோட்டத்தில் பிறந்த ஒரு தோட்டத் தொழிலாளியின் பிள்ளை. எனவே, எமது மக்களின் கஷ்டம் எமக்கு தெரியும். சஜித் ஆட்சியில் குறுகிய காலப்பகுதிக்குள் மலையக வீட்டுத் திட்டம் நிறைவுசெய்யப்படும்.

சஜித் ஆட்சிக்கு வந்தால் எமக்கு காணி தருவார் . எனவே, 2 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகளால் நுவரெலியா மாவட்டத்தில் சஜித் பிரேமதாசவை வெற்றிபெறவைப்போம்.

சஜித் இனவாதமற்ற, மதவாதமற்ற தலைவர். அவர் ஜனாதிபதியானால் அனைவருக்கும் சேவைகளை செய்வார். ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாடம் புகட்டுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.