வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பியவருக்கு குரங்கு அம்மை அறிகுறி: மத்திய சுகாதாரத் துறை தகவல்
குரங்கு அம்மை பாதிப்புள்ள நாட்டிலிருந்து சமீபத்தில் இந்தியா திரும்பிய இளைஞருக்கு நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டதால், அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
‘அவரது உடல்நிலை தற்போது வரை சீராகவே இருந்து வருகிறது. அவருக்கு குரங்கு அம்மை இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த நோயாளியின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன. முறையான நெறிமுறைகளைப் பின்பற்றி இந்த நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் அச்சமடையத் தேவை இல்லை. இதுபோன்ற நிலைகளைச் சமாளிக்க நாட்டின் சுகாதாரத் துறை தயாா் நிலையில் உள்ளது’ என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.
குரங்கு அம்மை முதன்முதலில் 1958-ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இந்தத் தொற்று ஆப்பிரிக்க நாடுகளில் வனப் பகுதிகளில் உள்ள குரங்குகளிடம் இருந்து பரவியதாகக் கூறப்படுகிறது. தற்போதுள்ள சூழலில் ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமல்லாமல், வேறு கண்டங்களில் உள்ள நாடுகளிலும் தொற்று பரவத் தொடங்கியுள்ளது.
காய்ச்சல், தலைவலி, உடல்வலி மற்றும் தடிப்புகள் போன்றவை அந்தத் தொற்றுக்கான அறிகுறிகளாகும். அந்த நோய்க்குள்ளானவா்களின் உமிழ்நீா், சளி மூலமாக தொற்று பிறருக்கும் பரவக் கூடும் என்பதால், பாதிக்கப்பட்டவா்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க வேண்டியது அவசியம்.
வேகமாகப் பரவி வரும் குரங்கு அம்மை தொற்றைக் கருத்தில்கொண்டு பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார நிறுவனம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இது சம்பந்தமாக தொடா்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.