ரணில் நாட்டுக்கு தேவை
நாடு வீழ்ச்சியடைந்து செல்லும் போது , நாட்டை பொறுப்பேற்க கோரிய போது முன் வராதவர்கள் தற்போது நாட்டை தம்மிடம் தருமாறு கோரி வாக்கு கேட்டு வருகின்றனர் என ஜக்கிய தேசிய கட்சியின் கிறிஸ்தவ விவகார யாழ் மாவட்ட அமைப்பாளர் விக்டர் ஸ்டான்லி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
நான் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் . அமைப்பாளராக கடந்த காலங்களில் இருந்தேன். நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்ட போது பிரதமராக சஜித் பிரேமதசாவை பதவியேற்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அவர் அப்போது அதனை ஏற்கவில்லை. பின்னர் ரணில் விக்கிரமசிங்கா ஜனாதிபதியாக பதவியேற்று , நாட்டை முன்னோக்கி கொண்டு சென்றார்.
அன்று தொடக்கம் நான் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு வழங்கி வருகிறேன். தலைவர் என்பது எந்த சூழலிலும் பொறுப்பேற்று முன்னோக்கி செல்ல வேண்டும்.
சஜித் பிரேமதாசாவுக்கு சந்தர்ப்பங்கள் கிடைத்த போது அவர் அதனை ஏற்கவில்லை. தற்போது நாட்டை தன்னிடம் தருமாறு கோருகின்றார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தான் நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி எடுத்து செல்லும் தனது திட்டங்களுக்கு இன்னமும் 05 வருடங்கள் தனக்கு தேவை என கோரியுள்ளார். எனவே அவருக்கு சந்தர்ப்பம் நாங்கள் கொடுக்க வேண்டும்.
எனவே எமது எதிர்கால சந்ததியினரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கே எமது வாக்கினை அளிக்க வேண்டும். பெற்றோல் வரிசை , காஸ் வரிசை என பல இன்னல்களை சந்தித்தவர்கள் இளையோர்களே எனவே மீண்டும் அப்படியொரு நிலை வராது இருக்க ரணில் விக்கிரமசிங்கேவிற்கு வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.