இளவரசர் வில்லியமுடன் காணொளி வெளியிட்டு முக்கிய தகவலை பகிர்ந்த கேட் மிடில்டன்
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தமது கணவர் வில்லியம் மற்றும் பிள்ளைகளுடன் நெகிழ்ச்சியான காணொளி ஒன்றை வெளியிட்டு முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
கீமோதெரபி சிகிச்சை
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முன்னெடுத்து வந்த நிலையில், தற்போது முதற்கட்ட கீமோதெரபி சிகிச்சையை முடித்துக் கொண்டதாக தகவல் பகிர்ந்துள்ளார்.
வெளியான காணொளியில், புற்றுநோய் தொடர்பில் உறுதி செய்யப்பட்டதன் பின்னர், கடந்த 9 மாதங்கள் மிகவும் கடினமானதாகவும் அச்சுறுத்துவதுமாக இருந்தது என கேட் மிடில்டன் மனம் திறந்துள்ளார்.
தற்போது நலமாக இருப்பதாக உணர்ந்தாலும், முழுமையாக குணமடைய பல மாதங்களாகலாம் என்றும், ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக பணிக்கு திரும்பும் திட்டமிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஞாயிறன்று முன்னெடுக்கப்படும் நினைவேந்தல் நிகழ்வில் கேட் மிடில்டன் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாக அரண்மனை வட்டாரத்தில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஒருமுறை
ஆனால் நவம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவில் நடக்கவிருக்கும் பரிசளிப்பு விழாவில் இளவரசர் வில்லியமுடன் பயணப்பட வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. கேட் மிடில்டன் வெளியிட்டுள்ள காணொளியில்,
அவர் இளவரசர் வில்லியம் தோளில் சாய்ந்திருப்பதும், பின்னர் வில்லியமுடன் சிரித்து மகிழ்வதும், கைகள் கோர்ப்பதும், பின்னர் முத்தமிட்டுக் கொள்வதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த காணொளியில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது ஆதரவை மீண்டும் ஒருமுறை கேட் மிடில்டன் பதிவு செய்துள்ளார்.