கடவுச்சீட்டுக்காக வரிசையில் காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு
எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதி வரை மிகவும் அத்தியாவசிய தேவை உள்ளவர்கள் மாத்திரம் கடவுச்சீட்டை பெற வருமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒக்டோபர் 20 ஆம் திகதிக்கு முன்னர் இலத்திரனியல் கடவுச்சீட்டு டெண்டரை வாங்கிய நிறுவனத்திடம் இருந்து ஒரு தொகை கடவுச்சீட்டுகள் பெறப்படும் என்றும், இதனால் கடவுச்சீட்டுகளை வழக்கம் போல் அச்சிட முடியும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும், எஞ்சியுள்ள வெற்று கடவுச்சீட்டு புத்தகங்கள் மற்றும் குடிவரவு திணைக்களத்தை சூழவுள்ள நிலைமைகள் தொடர்பிலும் நேற்று (09) பொது பாதுகாப்பு அமைச்சில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
வெற்று கடவுச்சீட்டு புத்தகங்கள்
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் 2003 ஆம் ஆண்டு முதல் இருபது வருட காலத்திற்கு 11 மில்லியன் வெற்று கடவுச்சீட்டு புத்தகங்களை வழங்கியுள்ளதுடன், இலத்திரனியல் கடவுச்சீட்டை வழங்குவதற்கான தேவையின் அடிப்படையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து மின்கடவுச்சீட்டுக்கான டெண்டர்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய தோற்றம் கொண்ட கடவுச்சீட்டுகள் அடுத்த மாதம் வரவிருப்பதால் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள அவசரப்படுபவர்கள் அடுத்த மாதம் வரை காத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.