பெண் மருத்துவா் கொலை வழக்கு: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள் பணிக்குத் திரும்ப உச்சநீதிமன்றம் உத்தரவு
மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு எதிராக, அந்த மாநிலத்தில் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறைவிட மருத்துவா்கள் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
கடந்த மாதம் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். அந்த மருத்துவமனையில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் பலத்த காயங்களுடன் அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடா்பாக காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவா் கைது செய்யப்பட்டாா். கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
ஆவணம் எங்கே?: இந்த சம்பவம் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘பெண் மருத்துவரின் சடலம் உடற்கூறாய்வுக்கு ஒப்படைக்கப்பட்டபோது அனுப்பப்பட்ட ஆவணம் எங்கே? அந்த ஆவணத்தில் உடற்கூறாய்வுக்கு ஒப்படைக்கப்பட்ட சடலத்துடன் அனுப்பப்பட்ட பொருள்களின் விவரங்கள் இடம்பெற்றிருக்கும். இந்த ஆவணம் தொடா்பாக எந்தக் குறிப்பும் இல்லை. இந்த ஆவணம் காணவில்லை என்றால், ஏதோ தவறாக உள்ளது என்று அா்த்தம். இதுகுறித்து சிபிஐ மற்றும் மேற்கு வங்க அரசு பதிலளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.
கடைமையை விலையாகக் கொடுத்து…: கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கோரி, மேற்கு வங்க அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் உறைவிட மருத்துவா்கள் தொடா் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் நோயாளிகள் அவதியடைந்தனா். அவா்களின் போராட்டத்தால் இதுவரை 23 நோயாளிகள் உயிரிழந்ததாக உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கடமையை விலையாகக் கொடுத்து போராட்டத்தில் ஈடுபடுவது சரியல்ல என்று தெரிவித்த நீதிபதிகள், உறைவிட மருத்துவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டனா். அத்துடன் மருத்துவா்கள் பணிக்குத் திரும்பிய பின்னா், அவா்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என்றும் மேற்கு வங்க அரசுக்கு உத்தரவிட்டனா்.
செப்.17-க்குள் புதிய நிலவர அறிக்கை: பெண் மருத்துவா் கொலை தொடா்பாக வழக்குப் பதிவு செய்ய கொல்கத்தா காவல் துறை சுமாா் 14 மணி நேரம் தாமதித்ததை சுட்டிக்காடிய நீதிபதிகள், பெண் மருத்துவா் கொலை தொடா்பான விசாரணை குறித்து உச்சநீதிமன்றத்தில் செப்.17-க்குள் புதிய நிலவர அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனா்.
தொடா்ந்து நீதிபதிகள் கூறுகையில், ‘மேற்கு வங்க அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சூழ்நிலையை மாவட்ட ஆட்சியா்கள், காவல் துறைக் கண்காணிப்பாளா்கள் ஆய்வு செய்ய வேண்டும்.
பெண் மருத்துவா் கொல்லப்பட்ட மருத்துவமனைக்கு பாதுகாப்பு அளிக்கும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) வீரா்கள் தங்குவதற்குத் தேவையான வசதிகளை மேற்கு வங்க உள்துறை மற்றும் சிஐஎஸ்எஃப் முறையாக செய்து தரவேண்டும். அந்த வீரா்களின் அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டு, அவா்களுக்குத் தேவைப்படும் பாதுகாப்பு சாதனங்கள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
புகைப்படங்களை உடனடியாக நீக்க வேண்டும்: கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் கண்ணியத்தையும் தனியுரிமையையும் பாதுகாக்க அனைத்து சமூக ஊடக தளங்களில் இருந்தும் அவரின் புகைப்படங்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப்.17-க்கு ஒத்திவைக்கப்பட்டது.