இறக்குமதி வரிகளில் திருத்தம் : கிடைத்த அமைச்சரவையின் அனுமதி
நாட்டிற்கு பொருட்கள் இறக்குமதியின் போது விதிக்கப்படும் பல்வேறு வகையான வரிகளில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி (Sri Lanka Cabinet) அளித்துள்ளது.
இதற்கமைய, சுங்க இறக்குமதி வரி, செஸ் வரி, சரக்கு மற்றும் சேவை வரி, துறைமுகம் மற்றும் விமான நிலைய மேம்பாட்டு வரி ஆகிய வரிகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
உள்ளூர் கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் பங்குதாரர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த வரிகள் திருத்தப்பட வேண்டும் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மூலப் பொருட்களுக்கான இறக்குமதி வரி
இதன்படி, கபில நிற சீனி இறக்குமதிக்கான வரி மற்றும் உள்நாட்டுக் கைத்தொழிலை வலுப்படுத்தும் வகையில் குறிப்பிட்ட சில மூலப் பொருட்களுக்கான இறக்குமதி வரியில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வரித்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.