ரஷ்யாவுக்கு உதவியதால் ஈரானுக்கு ஏற்பட்ட நிலை: பிரித்தானியா எடுத்த நகர்வு
பிரித்தானிய (UK) வான்வெளியில் ஈரான் (Iran) விமானங்களுக்கு பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மிகவும் மோசமான ஏவுகணைகளை ரஷ்யாவுக்கு (Russia) , ஈரான் விற்பனை செய்து வரும் நிலையில், உக்ரைன் – ரஷ்ய போர் மிக ஆபத்தான கட்டத்திற்கு நகரும் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் லம்மி (David Lammy) எச்சரித்துள்ளதை அடுத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது, ஒவ்வொரு வாரமும் பிரித்தானியாவுக்கும் ஈரானுக்கும் இடையே நேரடி விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அமெரிக்கா எச்சரிக்கை
இந்த நிலையில், ஈரானால் ரஷ்யாவிற்கு ஆயுதம் வழங்கும் நடவடிக்கை குறித்து அந்நாட்டுக்கு அமெரிக்க (US) வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் (Antony Blinken), தனிப்பட்ட முறையிலும் எச்சரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அத்தோடு, ரஷ்யா, ஈரானிடமிருந்து பாலிஸ்டிக் ஏவுகணைகளை பெற்றுள்ளதாகவும் எதிர்காலத்தில் அவை உக்ரைனுக்கு எதிராக பயன்படுத்தப்படலாம் எனவும் ஆண்டனி பிளிங்கன் பிரித்தானியாவில் வைத்து சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், குறித்த நடவடிக்கை தொடர்பில் அமெரிக்க தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களை ஈரான் நிராகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
விமான சேவை ரத்து
மேலும், ஜேர்மனி மற்றும் பிரான்ஸும் ஈரானுடனான இருதரப்பு விமான சேவைகளை ரத்து செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவைளை, ஈரானிய விமானங்கள் வரும் காலங்களில் ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் வான்வெளியை பயன்படுத்துவது கட்டுப்படுத்தப்படவுள்ளது.