காஸா முகாம் மீது விமானத் தாக்குதல்… தூக்கத்திலேயே கொல்லப்பட்ட டசின் கணக்கான மக்கள்
காஸா முகாம் பகுதியில் கூடாரங்களில் தூக்கத்தில் இருந்த மக்கள் மீது இஸ்ரேல் முன்னெடுத்த விமானத் தாக்குதலில் டசின் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பான இடம் இல்லை
பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கம் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கையில், காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு பாதுகாப்பான இடம் என்பது இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.
மக்கள் தூக்கத்தில் இருந்த நேரம் இஸ்ரேல் விமானத் தாக்குதலை முன்னெடுத்துள்ளது. தெற்கு காசாவில் உள்ள அல்-மவாசி முகாம் மீது இந்த தாக்குதல் நடந்துள்ளது.
பாதுகாப்பான பகுதி என இஸ்ரேல் ராணுவத்தால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதி மீதே தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் 19 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், டசின் கணக்கானோர் காயங்களுடன் தப்பியுள்ளனர்.
காஸாவில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான இடம் இல்லை என்பதை இந்தத் தாக்குதல் மீண்டும் காட்டுகிறது என குறிப்பிட்டுள்ள பாலஸ்தீனிய செஞ்சிலுவைச் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் நேபல் ஃபர்சாக்,
மனிதாபிமான மண்டலங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட பகுதி கூட பொதுமக்களுக்கான பாதுகாப்பை வழங்குவதில்லை என்றார். ஆனால், முகாமுக்குள் ஊடுருவிய பாலஸ்தீன போராளிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
சர்வதேச சட்டத்தை மீறும் இஸ்ரேல்
இஸ்ரேல் ராணுவத்தின் விளக்கத்தை ஹமாஸ் படைகள் ஏற்க மறுத்துள்ளதுடன், இது வடிகட்டிய பொய் என்றும் சாடியுள்ளது. தாக்குதலைத் தொடர்ந்து செஞ்சிலுவைச் சங்கத்தினர் முகாமிற்கு விரைந்து காயமடைந்தவர்களில் சிலரை மீட்டு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல முடிந்தது என்று ஃபர்சாக் கூறினார்.
இருப்பினும், இன்னும் பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளனர் என்றும், இன்னும் பலர் மீட்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் தொடர்ந்து மீறுவதால் காஸாவில் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், உலகத் தலைவர்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு, போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் நேபல் ஃபர்சாக் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஹமாஸ் படைகளின் அக்டோபர் தாக்குதலை அடுத்து போர் பிரகடனம் செய்துள்ள இஸ்ரேல் கடந்த 11 மாதங்களாக முன்னெடுத்துவரும் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 41,020 என்றே தகவல் வெளியாகியுள்ளது.
கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.