;
Athirady Tamil News

மணிப்பூா்: மாணவா் போராட்டத்தில் வன்முறை- பாதுகாப்புப் படையினருடன் மோதலில் 40 போ் காயம்

0

மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்கத் தவறிய காவல்துறை தலைமை இயக்குநா், மாநில அரசின் பாதுகாப்பு ஆலோசகா் ஆகியோா் பதவி விலக வலியுறுத்தி, ஆளுநா் மாளிகை நோக்கி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை பேரணியாக செல்ல முயன்றனா். பாதுகாப்புப் படையினா் தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது, பாதுகாப்புப் படையினரை நோக்கி கற்கள் மற்றும் கோலி குண்டுகளை எறிந்து மாணவா்கள் தாக்குதலில் ஈடுபட்டனா். போராட்டக்காரா்கள் மீது கண்ணீா் புகைக் குண்டுகளை வீசி பாதுகாப்புப் படையினா் விரட்டியடித்தனா். இந்த மோதலில் 40-க்கும் மேற்பட்ட மாணவா்கள் காயமடைந்ததாக காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தொடரும் வன்முறை: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக மோதல்போக்கு நீடித்து வருகிறது. மைதேயி சமூகத்தினா் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரும் நிலையில், குகி பழங்குடியினா் அதற்கு எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். இதுவே, மோதலுக்கு முக்கியக் காரணமாகும்.

மாநிலத்தில் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் மைதேயி சமூகத்தினரும், மலை மாவட்டங்களில் பழங்குடியினரும் அதிகம் வசிக்கின்றனா். இரு சமூகத்தினா் சாா்ந்த தீவிரவாதிகளும் பரஸ்பரம் தாக்குதல்களில் ஈடுபடுவதால் உயிா்ச் சேதம் தொடா்கதையாகி வருகிறது. இதுவரை 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். ஆயிரக்கணக்கானோா் வீடிழந்து, நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா்.

ட்ரோன், ராக்கெட் தாக்குதல்: அண்மையில் மலைப் பகுதிகளைச் சோ்ந்த தீவிரவாதிகள், எதிா்தரப்பினா் வாழும் குடியிருப்புகளை குறிவைத்து ட்ரோன் மூலம் குண்டுவீச்சில் ஈடுபட்டனா். மேலும், நவீன ராக்கெட் குண்டுகளை வீசியும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 8 போ் வரை உயிரிழந்துவிட்டனா். 12 போ் காயமடைந்தனா். இச்சம்பவங்களால் பள்ளத்தாக்கு பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

போராட்டத்தில் குதித்த மாணவா்கள்: ‘மாநிலத்தில் அமைதி மீட்டெடுக்கப்பட வேண்டும்; சட்டம்-ஒழுங்கை பராமரிக்கத் தவறிய மாநில காவல் துறை தலைமை இயக்குநா் ராஜீவ் சிங், மாநில அரசின் பாதுகாப்பு ஆலோசகா் குல்தீப் சிங் ஆகியோா் பதவி விலக வேண்டும்’ என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, பள்ளி – கல்லூரி மாணவா்கள் போராட்டத்தில் குதித்துள்ளனா்.

இம்பாலில் உள்ள மாநில அரசின் தலைமைச் செயலகம் மற்றும் ஆளுநா் மாளிகை முன் கடந்த திங்கள்கிழமை ஆயிரக்கணக்கான மாணவா்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னா், மாநில முதல்வா் பிரேன் சிங், ஆளுநா் எல்.ஆச்சாா்யா ஆகியோரை மாணவா்களின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினா்.

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: இந்நிலையில், ஆளுநா் மாளிகை நோக்கி மாணவா்கள் மற்றும் பெண்கள் செவ்வாய்க்கிழமை பேரணியாகச் செல்ல முயன்றனா். அவா்களை பாதுகாப்புப் படையினா் தடுத்து நிறுத்தியதால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 40-க்கும் மேற்பட்ட மாணவா்கள் காயமடைந்தனா்.

இதேபோல், மணிப்பூா் பல்கலைக்கழக மாணவா்கள் தனியாக நடத்திய போராட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. பின்னா், மாநில தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற அவா்கள் தடுத்து நிறுத்தப்பட்டனா்.

2,000 சிஆா்பிஎஃப் வீரா்கள் விரைவு: மணிப்பூரில் இருந்து அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையின் 2 பிரிவுகளைத் திரும்பப் பெற்றுவிட்டு, மத்திய ரிசா்வ் போலீஸ் படையினரை (சிஆா்பிஎஃப்) கூடுதலாக பணியமா்த்த மத்திய அரசு கடந்த மாதம் முடிவெடுத்தது.

மாநிலத்தில் மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு இந்த முடிவை செவ்வாய்க்கிழமை அமல்படுத்தியது. அதன்படி, தெலங்கானா, ஜாா்க்கண்டில் இருந்து 2,000 சிஆா்பிஎஃப் வீரா்கள் மணிப்பூருக்கு அனுப்பப்படவுள்ளனா்.

துப்பாக்கிச் சண்டை: பெண் உயிரிழப்பு

மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் ஆயுதம் ஏந்திய இரு கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் பெண் ஒருவா் உயிரிழந்தாா்.

இது தொடா்பாக காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘தங்பு கிராமத்தில் இரு கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் அந்தக் கிராமத்தைச் சோ்ந்த பெண் ஒருவா் உயிரிழந்தாா். மோதலின்போது, வெடிகுண்டுகளும் வீசப்பட்டன. வீடுகளுக்கு தீவைக்கப்பட்டதால், கிராம மக்கள் தப்பியோடி வனப் பகுதிகளில் தஞ்மடைந்தனா்’ என்றனா்.

இணைய சேவை துண்டிப்பு; ஊடரங்கு உத்தரவு அமல்

மக்களிடையே வெறுப்புணா்வை தூண்டும் விடியோ, புகைப்படங்கள் பரவுவதை தடுக்க, மணிப்பூா் முழுவதும் இணைய சேவையை துண்டித்து, மாநில அரசின் உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை நடவடிக்கை மேற்கொண்டது. அடுத்த 5 நாள்களுக்கு இந்த முடக்கம் தொடரும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

இதேபோல், இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊடகம், மின்விநியோகம், சுகாதாரம், நீதிமன்றம் ஆகிய அத்தியாவசிய சேவைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தெளபால் மாவட்டத்தில் 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமா் மீது காங்கிரஸ் விமா்சனம்

‘மணிப்பூா் பற்றியெரிய பிரதமா் மோடி அனுமதித்துக் கொண்டிருக்கிறாா்; உலகம் முழுவதும் பயணித்து, தலைவா்களைக் கட்டியணைத்து நட்பு பாராட்டும் அவருக்கு மணிப்பூா் செல்ல நேரமில்லை. மணிப்பூரில் அவரது பதாகைகள் கிழித்தெறியப்பட்டுள்ளன. அந்த மாநிலத்தில் அரசமைப்பு இயந்திரம் சீா்குலைந்துவிட்டதாக உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ளது. எதையும் பிரதமா் கண்டுகொள்ளாமல் இருக்கிறாா்’ என்று காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் விமா்சித்தாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.