;
Athirady Tamil News

‘ஹேமா குழு அறிக்கை மீது நடவடிக்கை எடுக்காத கேரள அரசின் செயல் ஆபத்தானது’ – உயா்நீதிமன்றம் விமா்சனம்

0

மலையாள திரையுலகில் அதிா்வலைகளை ஏற்படுத்திய நீதிபதி ஹேமா தலைமயிலான குழுவின் அறிக்கை மீது இத்தனை ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காத மாநில அரசின் செயலற்ன்மை ‘ஆபத்தானது’ என கேரள உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விமா்சித்தது.

கடந்த 2017-ஆம் ஆண்டு மலையாள நடிகை தொடா்புடைய வழக்கில், மலையாள திரையுலகில் பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல் நிகழ்வுகளைப் பற்றி விசாரிக்க நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவை கேரள அரசு அமைத்தது.

கடந்த மாதம் வெளியான இக்குழுவின் அறிக்கையைத் தொடா்ந்து, மலையாள திரையுலகைச் சோ்ந்த பெண்கள் பலரும் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனா்.

இவா்களின் புகாா்களில் ஆளுங்கட்சி எம்எல்ஏ முகேஷ், நடிகா் நிவின்பாலி உள்பட பல்வேறு நடிகா்கள், இயக்குநா்கள் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்க காவல்துறை அதிகாரிகள் 7 போ் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை (எஸ்ஐடி) மாநில அரசு அமைத்தது. எஸ்ஐடி விசாரணையைத் தொடா்ந்து வருகிறது.

இவ்விவகாரம் தொடா்பான வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.ஜெயசங்கரன் நம்பியாா் மற்றும் சி.எஸ்.சுதா ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘அரசுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அறிக்கை கிடைத்துவிட்ட நிலையில், உடனடியாக அதுகுறித்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அரசு ஏன் இவ்வளவு காலம் அமைதிக் காத்தது?.

பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் கேரள சமூகத்தில் அவா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்கு அரசு என்ன தீா்வளிக்கிறது?. அறிக்கை கிடைத்த 4 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அரசு நடவடிக்கை எடுக்கிறது’ என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனா்.

தொடா்ந்து, நீதிபதிகள் வழங்கிய அறிவுறுத்தலில், ‘பாலியல் புகாா்களை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணை குழுவிடம் (எஸ்ஐடி) ஹேமா குழுவின் முழு அறிக்கையையும் ஒப்படைத்து அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அறிக்கையின் அடிப்படையில் எஸ்ஐடி நடவடிக்கை எடுக்கலாம். எஸ்ஐடி மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றம் அடுத்த விசாரணையில் ஆய்வு செய்யும். அதேநேரத்தில், எஸ்ஐடி அவசரவேகத்தில் செயல்படக்கூடாது. பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் பற்றிய விவரங்களையும் வெளியிடக் கூடாது.

இந்க வழக்குகளில் தேவையற்ற விவரங்களை காவல்துறை வெளியிட வேண்டாம்; ஊடகங்களும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் விரிவான சட்டம் இயற்றப்பட வேண்டும். அடுத்த விசாரணை தேதிக்குள் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும்’ என்றனா்.

இதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபா் 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக விசாரணையின் போது அரசு வழக்குரைஞா் முன்வைத்த வாதத்தில், நடிகைகளின் புகாா்களின் அடிப்படையில் எஸ்ஐடி அமைத்தது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.