கொல்கத்தா இளநிலை மருத்துவர்களுக்கு மிரட்டல்.?ஆர்.ஜி கர் நிர்வாகம் அதிரடி!
இளநிலை மருத்துவர்களை மிரட்டியதாகக் கூறப்பட்ட புகாரின் பெயரில் 51 மருத்துவர்களுக்குக் கொல்கத்தா ஆர்.ஜி கர் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கொல்கத்தா
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த ஆக.9-ம் தேதி முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கருத்தரங்கு அறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.பெண்களுக்குப் பாதுகாப்பு வேண்டியும், குற்றவாளிகளைக் கைது செய்த கோரியும் மருத்துவர்கள் இடைவிடாது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. பயிற்சி மருத்துவர்கள் கொலை வழக்கில் இன்னும் குற்றவாளிகளைக் கைது செய்யப்படாததால் 20 நாட்களுக்கும் மேலாகப் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மிரட்டல்.?
மேலும் அவர்களை பணிக்குத் திரும்ப மாநில அரசு முதல் உச்சநீதிமன்றம் வரையில் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆர்.ஜி கர் மருத்துவமனையில் போராட்டம் நடத்தும் இளநிலை மருத்துவர்களை மிரட்டியதாகப் புகார் எழுந்துள்ளது.
அதில் பெரும்பாலானோர் சிபிஐ விசாரணை வளையத்தில் இருக்கும் சந்தீப் கோஷ் உடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் என்று கூறப்படுகிறது. இது குறித்து 51 மருத்துவர்களுக்குக் கொல்கத்தா ஆர்.ஜி கர் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் செப்டம்பர் 11ஆம் தேதி மருத்துவக்கல்லூரி விசாரணைக் குழு முன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.