பாகிஸ்தானில் நிலநடுக்கம்
பாகிஸ்தானில் புதன்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து அந்த நாட்டு வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:
பஞ்சாப் மாகாணத்தின் டேரா காஜி கான் பகுதியில் புதன்கிழமை நண்பகல் 12.28 மணிக்கு (உள்ளூா் நேரம்) நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.7 அலகுகளாகப் பதிவானது. 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகள் பஞ்சாப் மாகாணத்திலும், கைபா் பாக்துன்கவா மாகாணத்திலும் உணரப்பட்டன. இருந்தாலும் இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.
கடந்த 2005-ஆம் ஆண்டில் பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரில் ஏற்பட்ட 7.6 ரிக்டா் அளவு கொண்ட நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானவா்கள் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.