;
Athirady Tamil News

கடவுச்சீட்டு தாமதத்திற்கான காரணம்: திரான் அலஸ் வெளியிட்ட தகவல்

0

கடந்த 22 வருடங்களாக ஒரே நிறுவனத்தால் கடவுச்சீட்டு அச்சிடப்பட்டுள்ள நிலையில் இம்முறை அதை நிறுத்திவிட்டு குறைவான விலைக்கு பெற்றுக்கொள்ள முடியும் என்பதாலேயே டெண்டர் கோரச் சொன்னேன் என அமைச்சர் திரான் அலஸ் (Tiran Alles) தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று(11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “கடவுச்சீட்டு , விசா விவகாரம் எதிர்க்கட்சி உறுப்பினர்களக்கு அரசியல் ஆதாயம் அடைய காரணமாக அமைந்தது.தான் ஆட்சிக்கு வந்ததும் அதில் தொடர்புடையவர்களை தண்டிப்பேன் என சஜித் பிரேமதாச ( Sajith Premadasa) கூறுகின்றார். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவதை நாங்களும் விரும்புகிறோம்.

கடவுச்சீட்டு விவகாரம்
ஆனால் உண்மை தெரியாமல் பேசுகிறார். கடவுச்சீட்டு பெறுவதற்கு தரகர் மாஃபியா 50,000 ரூபாய் முதல் பல்வேறு தொகைகளை வசூலித்ததாக அறிந்தோம்.ஆனால் தற்போது அவை அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு குடிவரவு அலுவலகம் அருகிலும் ஒரு சிறப்பு காவல்துறையினர் குழு பணியில் உள்ளது.

இப்போது வரிசைகள் இல்லை. 22 வருடங்களாக ஒரே நிறுவனத்தால் கடவுச்சீட்டு அச்சிடப்பட்டது. குறைந்தபட்சம் டெண்டர் கூட கோரப்படவில்லை. அவர்கள் இதுவரை 11 மில்லியன் கடவுச்சீட்டுகளை அச்சிட்டுள்ளனர்.

தேர்தல் காலம்
இம்முறை அதே நபர்களிடம் கொடுக்கச் சென்றபோது அதை நிறுத்திவிட்டு டெண்டர் கோரச் சொன்னேன். புதிய கடவுச்சீட்டு கிடைக்கும் வரை சில தட்டுப்பாடு உள்ளது.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வெளிநாடு செல்வதற்கு எனக்கு விசா பெற வேண்டிய அவசியம் இல்லை.

உலகின் எந்த நாட்டிலும் 10 ஆண்டுகள் வாழ எனக்கு சிறப்பு விசா உள்ளது. ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அரசாங்கத்துடன் தொடர்புடைய 80 அமைச்சர்கள் வெளிநாடு செல்வதற்கான வீசாவைப் பெற்றுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இது மிகவும் தவறான கூற்று என்று நான் நினைக்கிறேன். தேர்தல் காலத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதை சொல்கிறார்கள். எந்த அமைச்சர்களுக்கும் விசா கிடைத்ததா என்று தெரியவில்லை. ஆனால் நான் அப்படி விசா எடுக்கவில்லை. அப்படி யாரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் இல்லை.” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.