உக்ரைனில் உதவி வாகனங்களை குறிவைத்து தாக்கிய ரஷ்யா: 3 செஞ்சிலுவை சங்க ஊழியர்கள் பலி
கிழக்கு உக்ரைனிய பகுதியில் உதவி வாகனங்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 3 செஞ்சிலுவை சங்க ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.
உதவி வாகனங்கள் மீது ரஷ்யா தாக்குதல்
கிழக்கு உக்ரைனில் செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்த உக்ரைனிய ஊழியர்கள் குளிர்காலத்தை எதிர்கொள்வதற்காக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மரம் மற்றும் நிலக்கரி துண்டுகளை விநியோகம் செய்து கொண்டு இருந்த போது தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
செஞ்சிலுவை சங்கத்தின் உதவி வாகனங்களை குறிவைத்து ரஷ்யா நடத்திய இந்த தாக்குதலில் 3 செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்த அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
மேலும் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்யா நடத்திய ஷெல் தாக்குதலில் மேலும் 2 செஞ்சிலுவை சங்க ஊழியர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களில் ஒருவரின் நிலைமை மிகவும் மோசமானதாக இருப்பதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் ஜனாதிபதி கண்டனம்
செஞ்சிலுவை சங்கத்தின் வாகனங்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலை போர் குற்றம் என உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் மனிதாபிமான அமைப்பான சர்வதேச செஞ்சிலுவை சங்கம் (ICRC) ரஷ்யா நடத்திய இந்த ஷெல் தாக்குதலில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.
மேலும் செஞ்சிலுவை சங்க குழுக்கள் இன்னும் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் தொடர்ந்து இருப்பதாகவும், ஊழியர்களின் வாகனங்கள் செஞ்சிலுவை சங்க சின்னத்துடன் தெளிவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.