கண்ணீர் அஞ்சலியை விழிப்புணர்வு போஸ்டராக மாற்றிய உறவினர்கள்! குவியும் பாராட்டு!!
கண்ணீர் அஞ்சலி தெரிவிக்கும் பேனரையே, தலைக்கவசம் அணிவதற்கான விழிப்புணர்வு போஸ்டராக மாற்றியிருக்கிறார்கள் உறவினர்கள்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு எடுத்த புகைப்படத்துடன், சாலை விதிகளை கவனமாக பின்பற்றாததாலும், சரியா(க)ன தலைகவசம் அணியாததாலும் ஏற்பட்ட சிறு விபத்து, மாரியப்பன் உயிரைக் குடித்துவிட்டது என்று பேனர் வைத்திருந்தது பல வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பொதுவாக யாராவது உயிரிழந்தால் கண்ணீர் அஞ்சலி பேனர் வைப்பார்கள், இதன் மூலம், அவர் இறந்துவிட்டார் என்று பலருக்கும் தெரிவிப்பதாகவே இது இருக்கும், ஆனால், திருச்சி மாவட்டத்தில், சாலை விபத்தில் இறந்தவரின் கடைசி நேர புகைப்படத்தை வெளியிட்டு விழிப்புணர்வு பேனராக மாற்றியிருக்கிறார்கள் அவரது உறவினர்கள்.
மாரியப்பன் (70) என்ற முதியவர், சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மரணமடைந்தார். அவரது புகைப்படத்துக்கு பதிலாக, அவர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த பிறகு எடுத்த புகைப்படத்தை கண்ணீர் அஞ்சலியில் சேர்க்க உறவினர்கள் முடிவு செய்துள்ளனர்.
திருச்சியில், வெள்ளிக்கிழமை இந்த புகைப்படத்துடன் கூடிய பல போஸ்டர்கள் வைக்கப்பட்டிருந்தன. அது, இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக தரமான தலைக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தும் விதமாக அமைந்திருந்தது.
எங்கள் குடும்பத்தில் நடந்தது போல யாருக்கும் இனி நடக்கக் கூடாது என்பதற்காகவே இந்த முடிவை எடுத்ததாகக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மாரியப்பனின் உறவினடர் ஷண்முக சுந்தரம் கூறுகையில், கடைசி நேரத்தில் மாரியப்பன் அனுபவித்த துயரம் கொஞ்சமல்ல, நாங்கள் மருத்துவமனையில் இருந்த போது இதுபோல பல விபத்துகளில் சிக்கி பலரும் வந்தார்கள், அவர்களில் படுகாயமடைந்தவர்கள் ஒன்று தலைக்கவசம் இல்லாமல் அல்லது தரமான கவசம் அணியாதவர்களாகத்தான் இருந்தார்கள். எனவேதான் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டோம் என்று கூறுகிறார்.