சத்தமின்றி சிரியாவிற்குள் இறங்கி அடித்த இஸ்ரேல் : ஈரானின் தளம் குண்டு வைத்து தகர்ப்பு
சிரியாவில்(syria) அமைந்துள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் ஏவுகணை உற்பத்தித் தளம் ஒன்றுக்குள் புகுந்த இஸ்ரேலிய(israel) விசேட படை அந்த தளத்தை தாக்கி அழித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலிய தரப்பிலிருந்து எந்த தகவலும் வெளிவராதபோதும் அண்மையில் இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்த விபரத்தை அமெரிக்க ஊடகம் வெளிப்படுத்தியுள்ளது.
லெபனான் எல்லையில் இருந்து வடக்காக சுமார் 40 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் மஸ்யாப் நகருக்கு அருகில் இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டதாக சிரிய அரச ஊடகம் தெரிவித்தது.
இது தொடர்பில் நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டிருக்கும் செய்தியில்,
ஈரானின் தளம் குண்டு வைத்து தகர்ப்பு
உலங்கு வானூர்திகளில் வந்திறங்கிய இஸ்ரேல் விசேட படையினர் ஈரானால் கட்டப்பட்ட தளத்தை குண்டு வைத்து தகர்த்ததாகவும் அங்கிருந்த முக்கிய தகவல்களை எடுத்துச் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளது.
தாக்குதலின் நோக்கம்
அமெரிக்கா மற்றும் மற்ற அதிகாரிகளின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே இந்த செய்தி வெளியாகியுள்ளது. இஸ்ரேல் படைகளை கட்டுப்படுத்துவதற்கு குறித்த தளத்திற்கு படையினர் குவிக்கப்படுவதை தடுக்கவே இஸ்ரேல் அங்கு வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
சிரியாவில் இஸ்ரேல் அடிக்கடி வான் தாக்குதல்களை நடத்துகின்றபோதும் அங்கு படையினர் தரையிறங்கி தாக்குதல் நடத்துவது வழக்கத்திற்கு மாறான செயற்பாடு என தெரிவிக்கப்படுகிறது.