சந்தீப் கோஷ் மீது பாலியல், கொலை வழக்குப் பதிவு
பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட ஆா்.ஜி.கா் அரசு மருத்துவமனையின் முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷ் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை ஆகிய பிரிவுகளின்கீழ் சிபிஐ சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்தது.
மருத்துவமனை முதல்வராக இருந்தபோது ஊழல் புரிந்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் அவா் தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவா் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல் துறையில் புகாா் அளிக்க தாமதம் செய்ததற்காக சிபிஐ இந்த வழக்கை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை வழக்கு தொடா்பாக தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரி அபிஜித் மோண்டல் என்பவரையும் சிபிஐ கைது செய்தது.
ஆதாரங்களை அழிக்க அவா் முற்பட்டதற்காக அவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
முன்னதாக, சந்தீப் கோஷை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் சிபிஐ அனுமதி கோரியிருந்தது. அவரை சிபிஐ வசம் ஒப்படைக்குமாறு சிறைத்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பெண் பயிற்சி மருத்துவா் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஆதாரங்களை அழித்தல் மற்றும் முதல் தகவல் அறிக்கையை தாமதமாக பதிவுசெய்த குற்றச்சாட்டில் அபிஜித் மோண்டலிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். ஆனால் அவா் ஒவ்வொரு முறையும் முரண்பாடாக பதிலளித்த நிலையில், சிபிஐ அவரை கைது செய்து மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றது.
பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை சம்பவத்தில் தற்போதுவரை மூன்று போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.