உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்கள்!
உத்தரகண்டில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி சனிக்கிழமை 4 பேர் உயிரிழந்தனர். அங்குள்ள ஆதி கைலாஷ் கோயிலுக்குச் சென்ற சிதம்பரத்தைச் சேர்ந்த 30 யாத்ரீகர்கள் இந்த நிலச்சரிவால் அங்கு சிக்கி தவித்து வருகின்றனர்.
ஆதிகைலாஷ் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், அவர்கள் அங்கிருந்து திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, வழியில் ஆதி கைலாஷிலிருந்து 18 கி.மீ. தொலைவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, அங்குள்ள ஒரு ஆசிரம பகுதியில் 30 பேரும் தங்கினர். நிலச்சரிவால் சாலை அடைப்பட்டதால், கடந்த 6 நாள்களாக, அங்கிருந்து வெளியேற முடியாமல் அவர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
ஆதிகைலாஷ் பகுதியில் சிதம்பரத்தைச் சேர்ந்த 30 பேர் சிக்கியுள்ளது தொடர்பாக, பித்தோராகர் மாவட்ட ஆட்சியரை தொடர்புகொண்டு பேசினேன். சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்ற 30 பேரும் பாதுகாப்பாக அங்குள்ள ஒரு ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், ஞாயிற்றுக்கிழமை (செப். 15) வானிலையைப் பொருத்து அவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்டு அனுப்பிவைப்பதாகவும் அவர் தெரிவித்தார் என்றார்.