தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் நிறுத்தப்படவுள்ள சலுகைகள் : அநுர வெளியிட்ட அறிவிப்பு
தேசிய மக்கள் சக்தியின் (NPP)ஆட்சியில் பல தரப்பினருக்கு வழங்கப்படுகின்ற அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும் என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களின் ஓய்வூதியம், இதர கொடுப்பனவுகள், வரியற்ற வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம், இலவச குடியிருப்பு, மின்சார, நீர் கட்டணங்கள் உட்பட அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரத்தில் (Anuradhapura) இன்று (15) நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
விசேட பிரமுகர் பாதுகாப்பு
அத்துடன் வாகன தொடரணி செல்லுதல், விசேட பிரமுகர் பாதுகாப்பு, உள்ளிட்டவற்றையும் வழங்கப்போவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகின்றபோதும், குற்றங்கள் குறைக்கின்றபோதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியமில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் இலங்கை வரலாற்றில் மக்கள் தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் சந்தர்ப்பமாக இது மாறியுள்ளது எனவும் கூறினார்.
கடந்த காலங்களில் உணவுப்பொதிக்காவும், பணத்துக்காகவும் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்குச் சென்ற மக்கள் தற்போது மாற்றத்துக்காக பிரசாரக் கூட்டத்துக்கு திரண்டு வருகின்றார்கள் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.