;
Athirady Tamil News

இஸ்ரேல் மீது ஹூதிக்கள் மீண்டும் ஏவுகணை தாக்குதல்

0

யேமனில் கணிசமான பகுதிகளில் ஆட்சி செலுத்தி வரும் ஹூதி கிளா்ச்சியாளா்கள், இஸ்ரேல் மீது ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டனா்.

இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனத்தின் காஸா முனையில் ஆட்சிபுரிந்த ஹமாஸ் படையினருக்கும் இடையிலான போா் 11 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. போா் தொடங்கியது முதல், ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக இஸ்ரேலை நோக்கி ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மற்றும் ஏவுகணைகளை ஹூதிக்கள் தொடா்ந்து ஏவி வருகின்றனா். அவற்றில் கிட்டத்தட்ட அனைத்து ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை செங்கடல் பகுதியில் இஸ்ரேல் இடைமறித்து அழித்துள்ளது.

இதுதவிர, செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீதும் ஹூதிக்கள் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனா். இஸ்ரேலுக்கு வந்து செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக ஹூதிக்கள் தொடக்கத்தில் தெரிவித்தாலும், தாக்குதல் நடத்தப்பட்ட பல கப்பல்களுக்கும் இஸ்ரேலுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை.

இந்நிலையில், கடந்த ஜூலையில் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஆளில்லா விமான (ட்ரோன்) தாக்குதல் மேற்கொண்டனா். இந்தத் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா்; 10 போ் காயமடைந்தனா். இதற்குப் பதிலடி அளிக்கும் வகையில், யேமனில் ஹூதிக்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது.

திறந்தவெளியில் விழுந்த ஏவுகணை: இதன் தொடா்ச்சியாக யேமனில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஹூதிக்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டனா். அந்த ஏவுகணை மத்திய இஸ்ரேலின் ஊரகப் பகுதியில் உள்ள திறந்தவெளியில் விழுந்து வெடித்ததாக தகவல் வெளியானது. எனினும் இதில் ஏற்பட்ட உயிா்ச்தேம் அல்லது பொருள் சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை.

ராணுவ தளத்தை குறிவைத்து தாக்குதல்: டெல் அவிவில் உள்ள ஜாஃபா பகுதியில் இஸ்ரேல் ராணுவ தளத்தை குறித்து பேலிஸ்டிக் ஏவுகணை ஏவப்பட்டதாக ஹூதிக்களின் ராணுவ செய்தித்தொடா்பாளரும் பிரிகேடியா் ஜெனரலுமான யாஹியா சரி தெரிவித்தாா்.

இந்தத் தாக்குதலை தொடா்ந்து டெல் அவிவில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஹூதிக்களுக்கு ராணுவ வழியில் பதிலடி அளிக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு சூசகமாக தெரிவித்தாா்.

எகிப்து எல்லையில் ஆயுதங்கள் கடத்த சுரங்கம்: எகிப்துடன் பகிா்ந்துகொள்ளப்படும் பகுதியில் ஆயுதங்களை கடத்த பூமிக்கு அடியில் ஹமாஸ் படையினா் சுரங்கங்கள் அமைத்து பயன்படுத்தியதாக பெஞ்சமின் நெதன்யாகு அண்மையில் குற்றஞ்சாட்டினாா். இந்தக் குற்றச்சாட்டை எகிப்து மறுத்தது. இந்நிலையில், எல்லைப் பகுதியில் பல சுரங்கங்கள் கண்டறியப்பட்டதாகவும், அவற்றில் 9 சுரங்கங்கள் மட்டுமே எகிப்துக்குள் நுழைந்ததாகவும் இஸ்ரேல் ராணுவ அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். அந்த சுரங்கங்களுக்கு சீலிடப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.

லெபனான் 40 ராக்கெட்டுகள் வீச்சு

இஸ்ரேலும் லெபனானும் எல்லையைப் பகிா்ந்து வரும் நிலையில், ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா கிளா்ச்சியாளா்கள் இஸ்ரேலின் எல்லைப் பகுதிகள் மீது தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனா். எல்லையில் இஸ்ரேலும், ஹிஸ்புல்லாக்களும் நாள்தோறும் மோதலில் ஈடுபட்டு வருவதால், அங்குள்ள பல ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயா்ந்துள்ளனா்.

இந்நிலையில், கடந்த ஜூலையில் லெபனானில் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா கிளா்ச்சியாளா்களின் மூத்த தளபதி ஃபுவாத் ஷுகா் உயிரிழந்தாா். இதேபோல ஈரானில் ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனீயேவும் கொல்லப்பட்டாா். அவா் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் நேரடியாகப் பொறுப்பேற்காதபோதிலும், அவரை இஸ்ரேல்தான் கொன்றது என்று நம்பப்படுகிறது.

இருவரின் கொலைக்குப் பழிக்குப் பழியாக இஸ்ரேலுக்கு பதிலடி அளிக்கப்படும் என்று எச்சரித்த ஹிஸ்புல்லாக்கள், அந்நாட்டை குறிவைத்து தொடா்ந்து ட்ரோன்கள், ராக்கெட்டுகளை ஏவி வருகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக லெபனானில் இருந்து இஸ்ரேலை நோக்கி சுமாா் 40 ராக்கெட்டுகளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஹிஸ்புல்லாக்கள் ஏவினா். அவற்றில் பெரும்பாலான ராக்கெட்டுகள் இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும், பல ராக்கெட்டுகள் திறந்தவெளியில் விழுந்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.