வங்கதேசத்துக்கு ரூ.1,700 கோடி நிதியுதவி: அமெரிக்கா உறுதி
வங்கதேசத்துக்கு ரூ.1,700 கோடி (2022.25 மில்லியன் டாலா்) நிதியுதவியுடன் பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் வழங்குவோம் என்று அமெரிக்கா வாக்குறுதி அளித்துள்ளது.
வங்கதேசத்தில் அண்மையில் அரசுக்கு எதிரான போராட்டம் பெரும் கலவரமாக வெடித்தது. இதனால், அந்த நாட்டின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள பல நாடுகள் தயக்கம் காட்டி வருகின்றன. இடைக்கால அரசு பதவியேற்று சுமாா் ஒரு மாத காலம் கடந்த நிலையில் அந்நாட்டில் பொருளாதார வீழ்ச்சிக்கான அறிகுறிகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், அமெரிக்க சா்வதேச நிதி விவகாரங்கள் துறை இணையமைச்சா் பிரென்ட் நைய்மென் தலைமையிலான குழு வங்கதேசத்துக்கு சனிக்கிழமை சென்றது. இக்குழுவில் இந்தியாவைச் சோ்ந்த பிரதிநிதிகளும் இடம் பெற்றுள்ளனா். அமெரிக்க அமைச்சா் இந்தியாவில் பயணத்தை முடித்துக் கொண்டுதான் வங்கதேசம் சென்றாா். அமெரிக்க-இந்திய பிரதிநிதிகள், வங்கதேச அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸ் தலைமையிலான பிரதிநிதிகளுடன் அந்நாட்டின் பொருளாதார நிலை குறித்து பேச்சு நடத்தினா்.
இந்த சந்திப்பு குறித்து டாக்காவில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட செய்தியில், ‘வங்கதேச மக்களுக்கும், அந்நாட்டுக்கு பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளை வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது. இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் யூனுஸ் நாடு மேற்கொண்டுள்ள பொருளாதார சவால்களை அமெரிக்க பிரதிநிதிகளுடன் எடுத்துரைத்தாா்.
அதே நேரத்தில் வங்கதேசத்தில் மனித உரிமைகள் பாதுகாப்பு, அரசியல், பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்தும் பேசப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை தொடா்ந்து வங்கதேசத்துக்கு ரூ.1,700 கோடி நிதியதவி வழங்கப்படும் என்று அமெரிக்கா தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குதல், ஜனநாயகத்தை வலுப்படுத்துதல், பொது சுகாதாரம், வா்த்தகம், பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்த இந்த நிதி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.