ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் யாழில் பூர்த்தி – பதில் மாவட்டச் செயலர் அறிவிப்பு
எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு சிறப்பாக நிறைவடைந்துள்ளதாகவும், யாழ்.மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பெருமளவில் பூர்த்தியடைந்துள்ளதாகவும் யாழ்.மாவட்டப் பதில் செயலரும், தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக குழுக் கடமைகளில் ஈடுபடும் அலுவலர்களுடனான முன்னாயத்தக் கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. குழுக்களின் கடமைகளுக்காக இணைக்கப்பட்டுள்ள அலுவலர்கள் அனைவரும் தேர்தல் பணியாளர்கள் என்ற ரீதியில் பாகுபாடின்றி ஒருமித்து ஒருங்கிணைந்து சிறப்பாகச் செயற்பட வேண்டும். வாக்கெண்ணும் நிலையமாகச் செயற்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் குழுக்களின் செயற்பாட்டில் ஈடுபடும் அலுவலர்கள் தங்களது சிறப்பான தொடர்பாடல் திறன் மூலம் வினைத்திறனாகச் செயற்பட்டுத் தேர்தல் கடமைகளுக்காக இணைக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களின் நலன்களைப் பேணிச் சிறப்பான செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பை வழங்குமாறும் மாவட்டச் செயலர் வலியுறுத்தினார்.