மணிப்பூரில் செப். 20 வரை இணைய சேவைக்குத் தடை!
மணிப்பூரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருவதால் வருகிற செப். 20 ஆம் தேதி வரை இணைய சேவை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் குக்கி – மெய்தி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பின்னர் நிலைமை சீராகி வந்த நிலையில், கடந்த வாரம் மணிப்பூர் தலைநகர் இம்பால் மேற்கு மாவட்டத்தில் ஆளில்லா விமானம் மூலம் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவம் மீண்டும் மணிப்பூரில் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரோன் தாக்குதல்களை முறியடிக்க முன்னெச்சரிக்கையாக, ட்ரோன்-எதிர்ப்பு அமைப்புகளை மணிப்பூரில் நிறுவி, அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் வன்முறையைத் தடுக்க, குறிப்பிட்ட மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப். 10 ஆம் தேதி முதல் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை இணைய சேவைக்குத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து மேலும் 5 நாள்களுக்கு அதாவது செப். 20 ஆம் தேதி வரை பிற்பகல் 3 மணி வரை இணைய சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மணிப்பூர் அமைச்சர் காஷிம் வசும் வீட்டின் மீது கையெறி குண்டு வீசி அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித காயம் ஏற்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மணிப்பூரில் மேலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.