கொல்கத்தா மருத்துவர் வழக்கில் சந்தீப் கோஷ் கைதானது ஏன்? கைது ஆணையில் வெளியான அதிர்ச்சி
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் கைது செய்யப்பட்டது ஏன் என்பது குறித்த தகவல்கள் மத்திய புலனாய்வு அமைப்பின் ரிமாண்ட் குறிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை-கொலை சம்பவத்தில், முதல் தகவல் அறிக்கையே பதிவு செய்யப்படக் கூடாது என ஆர்ஜி கர் மருத்துவமனை முதல்வர் நினைத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், இதற்கு, தாலா காவல்நிலைய அதிகாரி அபிஜித் மொண்டலும் உதவியக் குற்றத்துக்காவும், சிபிஐ விசாரணையின்போது, வழக்கை திசை திருப்ப முயன்ற குற்றத்துக்காகவும் அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தீப் கோஷ் என்ன செய்தார்?
இந்த நிலையில், சந்தீப் கோஷ் ரிமாண்ட் குறிப்பில் சிபிஐ தெரிவித்திருப்பதாவது, டாக்டர் கோஷ், மருத்துவமனை மூலம் ஆகஸ்ட் 9 காலை 9.58 மணிக்கு பெண் மருத்துவர் சம்பவம் பற்றி தகவல் கிடைத்துள்ளது. ஆனால், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு விரையவில்லை. காவல்நிலையத்துக்கும் முறைப்படி புகார் அளிக்கவில்லை. கொலையான பெண்ணின் உடலில் வெளிக்காயங்கள் இருந்தபோதும், கொலையை தற்கொலையாக மாற்றும் வேலை நடந்துள்ளது. பெற்றோர் அளித்த தகவலில், தங்களுக்கு முதலில் மகள் தற்கொலை செய்துகொண்டதாகவே தகவல் அளிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது வெளியானதும், டாக்டர் கோஷ், தொடர்ந்து காவல்துறை அதிகாரி மற்றும் வழக்குரைஞருடன் தொடர்பில் இருந்துள்ளார். பெண் மருத்துவரின் பெற்றோர், மகளைக் காண மருத்துவமனைக்கு வந்தபோது, அவர்களை சந்தீப் கோஷ் சந்திக்கக்கூடயில்லை.
உரிய நேரத்துக்குள், மருத்துவ வரைமுறைகளை முடிக்க சந்தீப் கோஷ் நிர்வாகம் தவறிவிட்டது, கொலையான பெண் மருத்துவரின் உடலை, மருத்துவமனையின் பிணவறைக்குக் கொண்டு செல்ல சந்தீப் கோஷ் உத்தரவிட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுபோல, மொண்டல் குறித்த ரிமாண்ட் குறிப்பில், கொலைச் சம்பவம் குறித்து 10 மணிக்கு இவருக்குத்தகவல் தெரிவிக்கப்பட்டு ஒரு மணி நேரத்துக்குப் பிறகு தான் இவர் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்.
பெண் மருத்துவர் இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டபோதும், காவல்நிலைய நாள் குறிப்பில், நினைவிழந்த நிலையில், பெண் மருத்துவர் கண்டெடுக்கப்பட்டதாக எழுதப்பட்டுள்ளது. குற்றத்தின் தீவிர தன்மை தெரிந்தும்கூட, விரைவாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய அதிகாரி தவறிவிட்டார் என்றும், சம்பவ இடத்தைப் பாதுகாக்க தவறியதால், சம்பந்தமில்லாத பலர் அந்த அறைக்குள் நுழைய ஏதுவாகிவிட்டது, அதனால், பல முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டுவிட்டது என்றும் விரைவாக உடல் கூறாய்வு செய்யத் தவறியது மற்றும் மரணச் சான்றிதழ் அளிக்கத் தவறியதாகவும் இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.