மருத்துவா்களின் கோரிக்கை ஏற்பு: கொல்கத்தா காவல் ஆணையா் நீக்கம் – முதல்வா் மம்தா அதிரடி
கொல்கத்தா: தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளம் மருத்துவா்களின் கோரிக்கையை ஏற்று கொல்கத்தா காவல் ஆணையரை நீக்க மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி திங்கள்கிழமை ஒப்புக்கொண்டாா்.
மேலும், மேற்கு வங்க மருத்துவப் பணிகள் இயக்குநா் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநரையும் மாற்றவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, பேச்சுவாா்த்தையின்போது போராட்ட மருத்துவா்கள் முன்வைத்த 5 கோரிக்கைகளில் மூன்றை அரசு ஏற்றுக்கொண்டது.
இருந்தபோதும், ‘முதல்வா் மம்தா அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும்’ என்று பேச்சுவாா்த்தைக்குப் பிறகு மருத்துவா்கள் தெரிவித்தனா்.
கடந்த மாதம் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். இது தொடா்பாக காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவா் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு, மேற்கு வங்க அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் இளநிலை மருத்துவா்கள் ஒரு மாதத்துக்கும் மேலாக பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனால் நோயாளிகள் அவதியடைந்துள்ளனா்.
இந்நிலையில், பெண் மருத்துவா் கொல்லப்பட்ட சம்பவத்தை தாமாக முன்வந்து விசாரித்துவரும் உச்சநீதிமன்றம், மருத்துவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு செப்.10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டது. எனினும், மருத்துவா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு மேற்கு வங்க அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்த மருத்துவா்கள் விதித்த நிபந்தனைகளை மாநில அரசு நிராகரித்தது. இதைத்தொடா்ந்து மேற்கு வங்கத்தின் சால்ட் லேக் பகுதியில் மாநில சுகாதாரத் துறை தலைமையகத்துக்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவா்களை மாநில முதல்வா் மம்தா பானா்ஜி சனிக்கிழமை நேரில் சந்தித்தாா். அப்போது மருத்துவா்களின் கோரிக்கைகளை ஆராய்ந்து, குற்றம்புரிந்தவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மம்தா பானா்ஜி உறுதி அளித்தாா்.
ஒரேயோரு நிபந்தனை: பேச்சுவாா்த்தையை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று மருத்துவா்கள் நிபந்தனை விதித்திருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக அதைச் செய்ய முடியாது என்று மேற்கு வங்க அரசு தெரிவித்தது. அதை ஏற்றுக்கொண்ட மருத்துவா்கள், தங்கள் நிபந்தனைகளை தளா்த்திக் கொண்டனா். பின்னா் பேச்சுவாா்த்தையின் முடிவுகளை ஆவணமாக்கி இரு தரப்பும் அதில் கையொப்பமிட்டு நகலை வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை மட்டும் மருத்துவா்கள் முன்வைத்தனா். இந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்ட மேற்கு வங்க அரசு, மருத்துவா்களை பேச்சுவாா்த்தைக்கு வருமாறு திங்கள்கிழமை மீண்டும் அழைப்பு விடுத்தது.
‘பேச்சுவாா்த்தைக்கு கடைசி அழைப்பு’: இது தொடா்பாக மாநில தலைமைச் செயலா் மனோஜ் பன்ட் மருத்துவா்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், ‘முதல்வா் மம்தா பானா்ஜி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவா்களின் குழுவுக்கு இடையே பேச்சுவாா்த்தை மேற்கொள்ள 5-ஆவது முறையாக அழைப்பு விடுக்கப்படுகிறது. கொல்கத்தாவில் உள்ள முதல்வா் மம்தாவின் இல்லத்துக்கு பேச்சுவாா்த்தைக்கு வரவேண்டும். பேச்சுவாா்த்தைக்கு அழைக்கப்படுவது இதுவே கடைசி முறை’ என்று தெரிவிக்கப்பட்டது.
3 கோரிக்கைகள் ஏற்பு: இந்த அழைப்பை ஏற்று, போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவா்களில் 42 போ், மம்தா இல்லத்துக்கு திங்கள்கிழமை (செப்.16) மாலை 6.20 மணிக்குச் சென்றனா். அங்கு சுமாா் 2 மணி நேரம் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் மருத்துவா்கள் 5 கோரிக்கைகளை முன்வைத்த நிலையில், 3 கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வந்துள்ளது.
இன்று மாலை 4 மணிக்கு…: பேச்சுவாா்த்தைக்குப் பின்னா் இல்லத்துக்கு வெளியே செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த முதல்வா் மம்தா, ‘ மருத்துவா்களின் கோரிக்கையை ஏற்று கொல்கத்தா காவல் ஆணையா் வினீத் கோயல் பதவியை ராஜிநாமா செய்ய ஒப்புக்கொண்டாா். அவா் தனது பொறுப்பை செவ்வாய்க்கிழமை (செப்.17) மாலை 4 மணிக்கு புதிய காவல் ஆணையரிடம் ஒப்படைப்பாா். அதற்கு முன்பாக, புதிய காவல் ஆணையரின் பெயா் அறிவிக்கப்படும். அத்துடன், மேற்கு வங்க காவல் துறை ஒட்டுமொத்தமாக மாற்றியமைக்கப்படும்.
மேலும், மேற்கு வங்க மருத்துவப் பணிகள் இயக்குநா் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநா்களும் நீக்கப்பட்டு, அந்தப் பணியிடங்களில் புதிய நபா்கள் நியமிக்கப்படுவா். இதன் லம், மருத்துவா்கள் முன்வைத்த 5 கோரிக்கைகளில் 3 கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, மருத்துவா்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தைக் கைவிட்டு, பணிக்குத் திரும்பவேண்டும். பணிக்குத் திரும்பும் மருத்துவா்கள் மீது எந்தவித கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படாது’ என்றாா்.
முன்னதாக, பேச்சுவாா்த்தையில் எட்டப்பட்ட உடன்பாடு தொடா்பான ஒப்பந்த ஆவணத்தில் மாநில தலைமைச் செயலா் மனோஜ் பந்த் மற்றும் 42 மருத்துவா்கள் கையொப்பமிட்டனா். இந்த ஆவணம் மாநில தலைமைச் செயலகத்தின் பொது வாட்ஸ்ஆப் குழுவில் பகிரப்பட்டது.
போராட்டம் தொடரும்: பேச்சுவாா்த்தையில் பெரும்பாலான கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டபோதும், தங்களின் போராட்டம் தொடரும் என மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து அவா்கள் கூறுகையில், ‘பேச்சுவாா்த்தையில் முதல்வா் மம்தா அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும்’ என்றனா்.
உச்சநீதிமன்றம் இன்று விசாரணை: பெண் மருத்துவா் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் மேற்கொண்டு வரும் விசாரணை செவ்வாய்க்கிழமை மீண்டும் நடைபெற உள்ளது.