;
Athirady Tamil News

யார் இந்த அதிஷி?

0

தில்லியின் புதிய முதல்வராக அமைச்சர் அதிஷி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் கைதான முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது.

எனினும் அவர் முதல்வர் அலுவலகத்துக்குச் செல்லக் கூடாது, எந்த கோப்புகளிலும் கையெழுத்திடக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இதனால் அவரால் முதல்வர் பணியைத் தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து தனது பதவியை ராஜிநாமா செய்வதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்தார். அதன்படி இன்று மாலை ஆளுநர் சக்சேனாவை சந்தித்து ராஜிநாமா கடிதத்தை வழங்குகிறார்.

அதற்கு முன்னதாக தில்லியின் அடுத்த முதல்வரை தேர்ந்தெடுக்கும்பொருட்டு இன்று(செவ்வாய்க்கிழமை) காலை ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.

கேஜரிவால் மனைவி சுனிதா, அமைச்சர்கள் அதிஷி, கோபால் ராய், கைலாஷ் கலோத் ஆகியோரின் பெயர்கள் அடுத்த முதல்வருக்கானத் தேர்வுப் பட்டியலில் இருப்பதாகக் கூறப்பட்டது.

எனினும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தில்லியின் அடுத்த முதல்வராக ஒருமனதாக அதிஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

யார் இந்த அதிஷி?

அதிஷி மர்லேனா சிங் 1981 ஜூன் 8 ஆம் தேதி தில்லியில் பிறந்தார். தில்லி பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்பும் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பும் பயின்றுள்ளார்.

2013 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார். கட்சியின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்.

2015 முதல் 2018 வரை மணீஷ் சிசோடியாவின் ஆலோசகராக இருந்தார்.

2019 மக்களவைத் தேர்தலில் கிழக்கு தில்லி பகுதியின் பொறுப்பாளராக இருந்து சிறப்பாக செயல்பட்டவர்.

பின்னர் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் கல்காஜி தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளரைவிட 11,000 வாக்குகள் அதிகம் பெற்றார்.

தற்போது கட்சியின் அரசியல் விவகாரங்கள் குழுவில் உறுப்பினராக உள்ளார். துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா சிறைக்கு சென்றபிறகு, 2023ல் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

மணீஷ் சிசோடியா கவனித்து வந்த கல்வி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், கலாசாரம், சுற்றுலா, பொதுப்பணி ஆகிய துறைகளை அதிஷி கவனித்து வருகிறார்.

கேஜரிவால் சிறையில் இருந்தபோது கட்சியின் மூத்த தலைவர் சௌரவ் பரத்வாஜுடன் இணைந்து தில்லி நிர்வாகப் பணிகளை திறம்பட கையாண்டார். அவ்வப்போது செய்தியாளர்களையும் சந்தித்து கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்தார்.

கடந்த ஆக. 15 சுதந்திர தினத்தன்று கேஜரிவாலின் கோரிக்கைக்கு ஏற்ப, முதல்வர் சார்பில் தில்லி அலுவலகத்தில் அவர் கொடியேற்றினார். கட்சியின் அனைத்து தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் ஆதரவு அவருக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.

தில்லி சட்டப்பேரவைக்கு 2025 தொடக்கத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. அதுவரை தில்லியின் முதல்வராக அதிஷி இருப்பார் என்று கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தில்லியின் 8 ஆவது முதலமைச்சர் ஆகிறார் அதிஷி. மேலும் சுஷ்மா சுவராஜ், ஷீலா தீட்சித்தைத் தொடர்ந்து மூன்றாவது பெண் முதல்வர் எனும் பெருமையை அதிஷி பெறுகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.