;
Athirady Tamil News

பேரினவாதிகளுக்கு வாக்களித்து அவர்களை பலப்படுத்த தமிழர்கள் முட்டாள்களில்லை – முன்னாள் தவிசாளர் நிரோஸ்

0

இலங்கை பொருளாதார ரீதியில் திவாலானமைக்கு தமிழ் மக்கள் மீதான யுத்த செலவீனமும் இனவாதத்தினால் ; தமிழ் மக்களை நாட்டின் அபிவிருத்தியில் பயன்படுத்தத் தவறியமையுமே காரணம் என்ற உண்மையை ஏற்று சிந்திக்காத செயல்படாத பேரினவாதத் தலைவர்களை நோக்கி நாம் இனியும் வாக்களிக்க முடியாது என முன்னாள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் ரெலோவின் தலைமைக்குழு உறுப்பினருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.

அச்சுவேலி முரசொலி முன்றலில் இடம்பெற்ற தமிழ் பொது வேட்பாளரை முன்னிறுத்திய பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும், தமிழ் மக்களின் வாக்குகள் தமக்குத் தேவை என வெற்றிவாய்ப்புக்காக போட்டியீடுகின்ற வேட்பாளர்கள் முன்டியடிக்கின்றனர். அவர்கள் தமிழ் மக்களிடத்தில் வாக்குகளைக் கேட்கும் போது, கடந்த காலத்தில் தமது அரசியல் நீரோட்டத்தில் எந்தளவு தூரம் இனவாத அணுகுமுறைக்குள் இருந்தனர் என்பதை சிந்தித்து நாட்டின் தலைவராவதற்கு அந்தஸ்தற்றவர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று வெற்றி வாய்ப்புள்ளவராகக் கருதப்படும் வேட்பாளர்கள் இலங்கை பொருளாதார ரீதியில் நாடு திவாலான நிலைக்குச் சென்ற போது சிங்கள மக்களிடத்தில் வெளிப்படையாகவே இந்த மோசமான நிலைமை அத்தனைக்கும் சொந்த தாய் நாட்டில் ஒரு தேசிய இனமான தமிழ் மக்கள் மீது அரச இயந்திரத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொடிய யுத்த செலவீனம் காரணம் என்பதை நாட்டிற்கு தெளிவு படுத்தவில்லை. சர்வதேசத்திடம் கடன் வாங்கச் சென்ற அரசு தமிழ் மக்கள் உலக அளவில் புலம்பெயர்வினால் பொருளாதார ரீதியில் முன்னிலையில் உள்ளனர் என்ற அடிப்படையில் அவர்களது முதலீடுகளையும் பங்களிப்பினையும் நாட்டிற்குள் கொண்டு வருவதற்கான உண்மையான முயற்சிகளை எடுக்கவில்லை. தமிழ் மக்கள் அங்கீகரிக்கத்தக்க அரசியல் தீர்வும் தமிழ் மக்களுக்கு போர் மற்றும் போருக்கு பின் முன்னான சூழ்நிலைகளில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பொறுப்புக் கூறல் இடம்பெற்று இருக்குமாயின் நாங்கள் ஒட்டுமொத்த இலங்கையராக முன்னேறியிருப்போம். இவற்றுக்கு இந்த பேரினவாத பௌத்த சிங்கள மேலாதிக்கத்தில் இருக்கக் கூடிய சிங்கள வேட்பாளர்கள் தயாரில்லை. அந்நிலையில் நாம் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டோம். எமது பிரச்சினைகளை முன்னிறுத்தும் தமிழ் வேட்பாளருக்கே வாக்களிப்போம் என்பதில் உறுதியாக இருப்போம் என முன்னாள் வலிகாமம் கழக்குப் பிரதேச சபைத்தவிசாளரும் ரெலோவின் தலைமைக்குழு உறுப்பினருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.

news17062024 – Copy

You might also like

Leave A Reply

Your email address will not be published.