;
Athirady Tamil News

“அமைதியும் அகிம்சையும், உரிமைக்கு வழிவகுக்கப் போவதில்லை “

0

“நமக்காக நாமே” என்று வேற்றுமையில் ஒற்றுமை கண்டு இனமாக ஓரணி நின்று, தனிவிரல் எழுச்சிக்கு தமிழர்கள் அடம்பன் கொடியாய் திரண்டிட வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில்,

பல தசாப்தங்களாக தமது இருப்புக்கும் உரிமைக்கும் போராடிக் கொண்டிருக்கும் முதுபெரும் இனமான தமிழினம், இத்தனை ஆண்டு காலமாக இலங்கை தேசத்தின் அரியாசன அதிகாரத்திற்கு அயலவரை தெரிவுசெய்து எதனையுமே அடைந்திடாத ஏமாற்றத்தினால் அழுத்துப் போய் இருக்கிறது.

இவ்வேளை, பல்லின கலாச்சார பண்பாட்டினை கொண்ட மக்கள் வாழ்கின்ற இலங்கைத் தீவில், யார் யாரை ஆழ்வது என்கின்ற அரசியல் அதிகார போட்டிக்கு நாடு தயாராகிக் கொண்டிருக்கிறது. இத்தருணத்தில், ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பினராகிய நாம், காலத் தேவை உணர்ந்து சமூக அக்கறையுடன் இந்த அறிக்கையினை பொதுக் களப்படுத்த கடமைப்படுகிறோம்.

ஒரு பூர்வீக வரலாற்றை கொண்ட மக்கள் இனம் என்ற வகையில், “ஒற்றுமையாக வாழ்வோம்” என்கின்ற அதிகார வர்க்கத்தின் ஒற்றை வாக்குறுதியை நம்பி சுதந்திர வாழ்வுரிமைக்காக பல்வேறுபட்ட விட்டுக்கொடுப்புகளுடன் படியிறங்கி அமைதிப் பேச்சுக்களில் ஈடுபட்டது தமிழினம்.

ஆனாலும்,கிடைத்தவை வெற்று வாக்குறுதிகள் மட்டுமே. இலங்கை ஒரு ஜனநாயகப் பெயர் கொண்ட நாடென்ற வகையில், அடுத்து வந்த தமிழ்ச் சந்ததிகள் அகிம்சைப் போராட்டங்களின் ஊடாக அதிகாரத்தின் கதவுகளை தட்டின. அவைகளும் கூட இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட்டது.

இதன் மூலம், “அமைதியும் அகிம்சையும், உரிமைக்கு வழிவகுக்கப் போவதில்லை ” என்றுணர்ந்த இளைய தலைமுறையின் கைகளில் ஆயுதங்களை வலிந்து திணித்தது இலங்கையின் பேரினவாதம். அதன் விளைவுகளும் கூட, பன்னாட்டு பலத்தின் ஊடே நிர்மூலமாக்கப்பட்டதுதான் தமிழினத்தின் இதுநாள் வரலாறு.

இப்போது, சற்று நின்று நிதானித்து சிந்தித்து செயலாறும் முக்கிய தருணம் என்பதை கவனப்படுத்தியாக வேண்டும்.

அதாவது, வடக்கு கிழக்குத் தமிழர் தாயகத்தின் சுமார் 18,888 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் வாழ்கின்ற 35 லட்சம் மக்களின் தன்னாட்சி அதிகாரத்தின் அவசியத்தை மக்கள் பலத்துடன் உலகறிய செய்ய வேண்டும். அதற்கு, உலக வாழ் தமிழினம் அடம்பன் கொடியாய் திரளும் தருணமொன்றை காலம் இப்போது எமக்களித்துள்ளது.

இதற்கு மேலும் அடிமைப்படுத்தும் அதிகாரத்தின் வரம்புக்குள், இரண்டாம் தர குடிமக்களாக தருவதை ஏற்றுக்கொண்டு தங்கி வாழும் இனமாகத் தமிழர்கள் இருந்துவிட முடியாது என்பதை, மாபெரும் சேனையாக திரண்டெழுந்து சர்வதேசத்தின் செவிகளுக்கு இடித்துரைக்க வேண்டும்.

தமிழினம் இதுநாள் வரை சந்தித்து வந்த பேரிழப்புகளுக்கெல்லாம் பரிகார நீதி வேண்டுமென்றால், “நமக்காக நாமே” என்று வேற்றுமையில் ஒற்றுமை கண்டு இனமாக ஓரணி நின்று, தனிவிரல் எழுச்சிக்கு தமிழர்கள் அடம்பன் கொடியாய் திரண்டிட வேண்டும் என்பதை அவசியப்படுத்துகின்றோம் என தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.