;
Athirady Tamil News

மாதமொன்றுக்கு 5 இலட்சம் ரூபா வருமானம்! விவசாயிகள் தொடர்பில் அரசாங்கத்தின் திட்டம்

0

விவசாயிகள் மாதம் ஒன்றுக்கு சுமார் 4 – 5 இலட்சம் ரூபா வரை வருமானம் ஈட்டும் வகையில் அரசாங்கம் திட்டத்தைத் தயாரித்துள்ளது என்று விவசாயத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து நேற்றையதினம் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முழு இலங்கையினதும் ஆதரவு ரணிலுக்கு

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தேர்தலின் வெற்றி அலை, தேர்தல் பிரசாரத்தின் முடிவிலேயே தொடங்குகிறது. ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்திற்கு முன்கூட்டித் தயாராகிய அனைவரும் தோற்றனர். கடைசி நிமிடத்தில் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தோம் என்பது உங்களுக்குத் தெரியும்.

ஆனால் இன்றைய நிலையில், முழு இலங்கையினதும் ஆதரவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெற்றுள்ளார் என்றே கூற வேண்டும்.

அத்துடன், இன்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 38 பேரில் யார் இந்த நாட்டைப் பொறுப்பேற்க முன்வந்தனர் என்பது மக்களுக்குத் தெரியும்.

யாராலும் முடியாது என்று சொன்னதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ‘இயலும்’ என்று செய்து காட்டிவிட்டே உங்கள் முன்வந்துள்ளார். குழுவாக, நாங்கள் அவரை ஆதரிக்க முடிவு செய்தோம். ஏனெனில் அவருக்கு ‘இயலும்’ என்று எங்களுக்குத் தெரியும்.

நான் விவசாய அமைச்சராக அமைச்சுப் பொறுப்பை ஏற்றபோது விவசாயிகளுக்கு உரம் இல்லை. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடனடியாக ஜனாதிபதி பதவியை ஏற்று விவசாயிகளுக்கு உரம் வழங்க ஏற்பாடு செய்தார். அதனால், இன்று நாடு அரிசியில் தன்னிறைவு பெற்றுள்ளது. நெல் விவசாயிகளுக்கு மட்டுமின்றி மற்ற விவசாயிகளுக்கும் உர மானியம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

பாரம்பரிய விவசாயத்தில் இருந்து கடந்து, நவீன விவசாயத்தை கிராமத்திற்கு கொண்டு வந்துள்ளோம். விவசாயிகளுக்கு இன்று பலன் கிடைத்துள்ளது.

விவசாயிகள் மாதம் ஒன்றுக்கு சுமார் 4 – 5 இலட்சம் ரூபா வரை வருமானம் ஈட்டும் வகையில் அரசாங்கம் திட்டத்தைத் தயாரித்துள்ளது.

சவால்களை ஏற்றுக்கொண்டால், அந்த சவாலை நாம் வெல்ல வேண்டும். மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கிறோம். இன்று நாடு அழிந்துவிட்டது என்று சிலர் கூறுகின்றனர்.

இந்த அழிவுக்கு சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார ஆகியோரும் உடந்தை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஜே.வி.பி.யே அப்போது இந்த நாட்டை வங்குரோத்தாக்கியது. அன்று சுமார் 200 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை அழித்துள்ளனர்.

குறைந்த பட்சம் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவும் அவர்களுக்கு உரிமை இல்லை. ஒரு நாட்டை ஆளுவதை விடுத்து ஒரு டீக்கடையைக் கூட நடத்த ஜே.வி.பி விற்கு முடியாது.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் அந்த பாடத்தை அவர்கள் கற்றுக் கொள்வார்கள். அவர்களுக்கு பாடம் புகட்டுவதற்காக அன்றி, இந்த நாட்டை வெற்றிபெறச் செய்யவே, கேஸ் சிலிண்டருக்கு வாக்களித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.