ரஷ்யாவுக்கு எதிர்ப்பு, உக்ரைனுக்கு ஆதரவு? மீண்டும் பிரான்ஸின் குட்டு வெளியானது
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதும், ஐரோப்பிய நாடுகள் பல, ரஷ்யா மீது தடைகள் விதித்தன. முழு ஐரோப்பாவும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை கணிசமாக குறைத்தது.
ஆனால், கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்தாலும், ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து திரவ இயற்கை எரிவாயுவை வாங்கிக்கொண்டுதான் இருக்கின்றன.
பிரான்ஸ் கடந்த ஆண்டு ரஷ்யாவிடம் வாங்கிய எரிவாயுவை விட, இந்த ஆண்டு 7 சதவிகிதம் அதிக எரிவாயுவை ரஷ்யாவிடமிருந்து வாங்கியுள்ளதுடன், பெல்ஜியம் நாட்டுக்கு ஏற்றுமதியும் செய்துள்ளது.
மீண்டும் பிரான்ஸின் குட்டு வெளியானது
ஆக, ரஷ்யாவை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டே, அந்நாட்டிடம் பிரான்ஸ் எரிவாயு வாங்கும் விடயம் தெரியவந்தது.
இந்நிலையில், எரிவாயு மட்டுமல்ல, ரஷ்யாவிடம் பிரான்ஸ் யுரேனியம் வாங்குவதும் தெரியவந்துள்ளது.
ரஷ்யாவிடம், ஜேர்மனி, தென்கொரியா போன்ற நாடுகள், ஏன் அமெரிக்கா கூட யுரேனியம் வாங்குகின்றது. ஆனால், அவை எல்லாவற்ரையும்விட, பிரான்ஸ்தான் ரஷ்யாவிடம் அதிக யுரேனியம் வாங்குகிறது என்பது தற்போது தெரியவந்துள்ளது.
2023 ஜனவரி முதல், 2024 ஜூன் வரை, பிரான்ஸ் இறக்குமதி செய்த யுரேனியத்தில் 60.5 சதவிகிதம், ரஷ்யாவிலிருந்துதான் வந்துள்ளது என RIA Novosti என்னும் ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆக, உக்ரைனை ஆதரிப்பதாகவும் ரஷ்யாவை எதிர்ப்பதாகவும் ஒரு பக்கம் கூறிக்கொள்ளும் பல நாடுகள், எரிவாயு மற்றும் யுரேனியம் போன்ற விடயங்களுக்காக ரஷ்யாவையே நம்பியுள்ளன என்பது குறித்த செய்திகள் வெளியாகி, உண்மை நிலவரத்தை உலகுக்கு வெளிப்படுத்தியவண்ணம் உள்ளன.