;
Athirady Tamil News

அரச மற்றும் தனியார் துறையில் ஒரு இலட்சம் சுய வேலைவாய்ப்புகள்: ரணில் உறுதி

0

கஷ்டப்பட்டு அடைந்த வெற்றியைப் பாதுகாக்கும் வகையில் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி எரிவாயு சிலிண்டருக்காக வாக்களிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களிடம் கோரியுள்ளார்.

அரசு ஏற்கனவே நடைமுறைபடுத்திய வேலைத்திட்டத்திற்கே சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு இருக்கின்றது என்று தெரிவித்த ஜனாதிபதி, மக்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளை வழங்கும் சஜித்துக்கோ அல்லது அநுரவுக்கோ நாட்டை முன்னேற்றுவதற்கான வேலைத்திட்டம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வெல்லவாயயில் நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் கூறினார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் பேரணியில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

இதில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது,

இளைஞர்களுக்கு 4 வருடங்களாக வேலைவாய்ப்புகள்
“இந்த நாட்டின் இளைஞர்களுக்கு 4 வருடங்களாக வேலைவாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அடுத்த ஆண்டு அரச மற்றும் தனியார் துறையில் ஒரு இலட்சம் சுய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்.

மேலும் 50 ஆயிரம் பேருக்கு அவர்கள் விருப்பமான தொழில் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற நிதி உதவி வழங்கப்படும். இதற்கு தொங்குபாலத்தில் பயணத்தை முடிக்க வேண்டும். நாம் இன்னும் சிறிது தூரம் செல்ல வேண்டும். தொங்கு பாலம் கொஞ்சம் ஆடுகின்றது.

செப்டெம்பர் 21 ஆம் திகதி மக்கள் தங்கள் கடமையை நிறைவேற்றினால் இந்தத் தொங்கு பாலத்தின் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும். இன்று தொங்கு பாலத்தைக் கடக்கும் குழந்தையின் உரிமையை எடுக்க இரண்டு பேர் தயாராகின்றார்கள். இருவரிடம் எந்தத் திட்டமும் கிடையாது.

ஐ.எம்.எப். ஆதரவு
எனவே, நாட்டின் எதிர்காலத்தை அவர்களிடம் ஒப்படைக்க முடியாது. நாம் முன்னேற வேண்டுமானால், ஐ.எம்.எப். ஆதரவுடன் முன்னேற வேண்டும். அரசு இதுவரை செயற்படுத்தி வரும் திட்டத்திற்குத்தான் அதன் ஆதரவு உள்ளது.

முன்னாள் விவசாய அமைச்சர் அநுரகுமார என்னை விவாதத்திற்கு அழைத்தார். நான் அதற்குத் தயார் என்று அறிவித்துள்ளேன். ஆனால், இன்னும் அழைப்பு வரவில்லை. இன்றும் நான் அதற்குத் தயாராக இருக்கிறேன். அவர்களால் ஏன் விவாதத்திற்கு வர முடியாது? அவர்களிடம் எந்தத் திட்டமும் இல்லை என்பதாலே பின்வாங்குகின்றனர்.

அனைத்தையும் இலவசமாகக் கொடுப்பது பற்றித்தான் சஜித் பேசுகின்றார். தலை வலியையும் அவர் இலவசமாகக் கொடுப்பார். ஆனால், நாம் கடினமாகப் பெற்ற வெற்றியைப் பாதுகாத்து முன்னேற வேண்டும்.

இதற்காகச் செப்டெம்பர் 21ஆம் திகதி காஸ் சிலிண்டருக்காக அனைவரும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.