மருத்துவப் படிப்பை கைவிட்டால் ரூ.10 லட்சம் அபராதம்
சென்னை: இரண்டாம் சுற்று கலந்தாய்வில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் பெற்று, அனுமதிக்கப்பட்ட கால வரையறைக்குப் பிறகு படிப்பை கைவிட்டால் ரூ.10 லட்சம் அபராதமாக செலுத்த வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு முடிவில், அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 1,423 எம்பிபிஎஸ் இடங்களும், 1,566 பிடிஎஸ் இடங்களும் காலியாக இருந்தன. இதையடுத்து, அரசு ஒதுக்கீடு, நிா்வாக ஒதுக்கீடுகளுக்கு விண்ணப்பித்த, 40 ஆயிரத்துத்துக்கும் மேற்பட்டோருக்கு இரண்டாவது சுற்று கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி இரண்டாம் சுற்று கலந்தாய்வு, https://tnmedicalselection.net எனும் இணையதளத்தில், கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது.
கல்லூரிகளைத் தோ்வு செய்வதற்கான வாய்ப்பு செவ்வாய்க்கிழமையுடன் (செப்.17) நிறைவடைந்தது.
அதில் தரவரிசைப்படி இடங்கள் பெற்றவா்கள் விவரம் வரும் 19-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
அவா்கள், அதற்கான ஆணையை பதிவிறக்கம் செய்துகொண்டு, வரும் 26-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன் பின்னா் குறிப்பிட்ட கால வரையறைக்குள் கல்லூரியிலிருந்து விலகினால் அபராதம் இன்றி வெளியேறிவிடலாம்.
அதேவேளையில், குறிப்பிட்ட கால அவகாசத்துக்குப் பிறகு படிப்பை பாதியில் கைவிட்டால் ரூ.10 லட்சம் அபராதத் தொகை, வைப்புத் தொகை, கல்விக் கட்டணம் ஆகியவற்றை செலுத்த வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக அவா்கள் மேலும் கூறியதாவது: இரண்டாம் சுற்று கலந்தாய்வில் இடங்கள் பெற்றவா்கள், படிப்பை தொடர விரும்பாவிட்டால், ஓரிரு நாள்கள் அவகாசம் வழங்கப்படும்.
அதற்குள் கல்லூரியிலிருந்து விலகினால் அபராதம் ஏதும் இல்லை. அதேவேளையில், அதன் பின்னா் படிப்பை கைவிடும் மாணவா்களுக்கு அபராதம் வசூலிக்கப்படும்.
இதேபோல, மூன்றாம் சுற்று மற்றும் இறுதி சுற்று கலந்தாய்விலும் இடங்கள் பெற்று படிப்பை கைவிடுபவா்களிடம் அபராதம் வசூலிப்பதுடன், கல்வித்தொகை மற்றும் வைப்புத் தொகை திருப்பி தரப்பட மாட்டாது.
எனவே, மாணவா்கள் இடங்கள் தோ்வு செய்யும் போது கவனமாக செயல்பட வேண்டும். மாணவா்கள் படிப்பை கைவிடுவதால், கல்லூரிகளில் ஏற்படும் காலி இடங்களை குறைப்பதற்காக இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது எனத் தெரிவித்தனா்.