பன்றிக் காய்ச்சல் தொடர்பில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் பிரான்ஸ்
பக்கத்து நாடான ஜேர்மனியில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், ஜேர்மனியுடனான எல்லையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை பிரான்ஸ் தீவிரப்படுத்தியுள்ளது.
வேகமாக பரவும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்
ஐரோப்பாவின் பல பகுதிகளில், காட்டுப்பன்றிகளில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது.
ஜேர்மனியிலும், காட்டுப்பன்றிகளிடையே இந்த ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவிவருவதால், ஜேர்மனியுடனான எல்லையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்திவருவதாக பிரான்ஸ் வேளாண்மைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸ், மனிதர்களுக்கு பொதுவாக ஆபத்தை ஏற்படுத்துவதில்லை என்றாலும், பன்றிகளின் உயிரைப் பறிக்கக்கூடியதாகும்.
இந்த காய்ச்சல் பிரான்சுக்குள்ளும் பரவுவதைத் தடுப்பதற்காக பிரான்ஸ் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் துவக்கியுள்ளதுடன், பாதிக்கப்பட்ட காட்டுப்பன்றிகள் ஜேர்மனியிலிருந்து பிரான்சுக்குள் நுழையாமல் தடுக்கும் வகையில், ஜேர்மன் எல்லையில் வேலி அமைத்தல் முதலான நடவடிக்கைகளைத் துவக்கவும் திட்டமிடப்பட்டுவருகிறது.