எங்களை காப்பாற்றுங்கள்… ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்கள் கதறல்
உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்கள் பலர் தங்களை காப்பாற்ற வேண்டும் என கதறும் நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளனர்.
விடுவிக்கும் நடவடிக்கைகள்
கடந்த வாரம் 91 இந்தியர்களை ரஷ்ய ராணுவம் பணியில் இருந்து விடுவித்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது இந்தியா திரும்ப காத்திருக்கும் பலர் அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
ரஷ்ய ராணுவத்தில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கைகள் மிக தாமதமாக நடப்பதால் பலரும் உயிருக்கு பயந்து போயுள்ளனர். உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய ராணுவத்தில் 91 இந்தியர்கள் களமிறங்கியிருப்பதாக தகவல் வெளியானது.
ஆனால் இந்திய அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்று அந்த 91 இந்தியர்களையும் பணியில் இருந்து ரஷ்யா விடுவித்தது. இதில் பலர் இந்தியா திரும்பியுள்ளனர். ஆனால் சிலர் இன்னும் ரஷ்யாவில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அவர்களை ரஷ்யாவில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் தாமதமாவதாகவே கூறப்படுகிறது. இதனால் தாங்கள் உயிருடன் வீடு திரும்புவோமா என அச்சம் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலோர் ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் பணம் மற்றும் வேலை தருவதாக வாக்குறுதியளித்து முகவர்களால் ஏமாற்றப்பட்டவர்கள். ஆனால் அவர்களை ரஷ்ய ராணுவம் போர்முனையில் அனுப்பியது.
முதற்கட்டமாக 45 இந்தியர்கள்
பலரும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதிகளில் முகாமிட்டுள்ளனர். 9 இந்தியர்கள் உக்ரைன் படைகளால் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியர்களை ரஷ்யாவுக்கு அனுப்பிய விவகாரத்தில் இதுவரை 19 பேர்கள் கைதாகியுள்ளனர்.
ஜூலை மாதமே, இந்தியர்கள் அனைவரையும் விடுவிக்க ரஷ்ய அரசாங்கம் ஒப்புக்கொண்டது. அதன் பின்னர் முதற்கட்டமாக 45 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டனர். இதில் சிலர் இந்தியா திரும்பியுள்ளனர்.
ஆனால் எஞ்சியவர்கள் தற்போதும் ரஷ்யாவில் சிக்கியுள்ளதுடன் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என குறிப்பிட்டுள்ளனர். 19 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களை இந்தியா, துபாய் மற்றும் ரஷ்யாவில் உள்ள முகவர்கள் மூலமாக தெரிவு செய்துள்ளதாகவே கூறப்படுகிறது.