தேர்தல் தொடர்பான செயலமர்வு
சனாதிபதித் தேர்தல் தொடர்பாக பெறுபேறுகளை தயாரித்து வெளியிடும் நிலையத்தில் கடமையாற்றவுள்ள அலுவலர்களுக்கான செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் புதன்கிழமை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இச் செயலமர்வில் கருத்துத் தெரிவித்த தெரிவத்தாட்சி அலுவலர்,
எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள சனாதிபதித் தேர்தலில் வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் பெறுபேற்றினை தயாரித்து வெளியிடும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள 511 வாக்களிப்பு நிலையங்களினதும் வாக்குகளை எண்ணுவதற்காக, 41 வாக்கெண்ணும் நிலையங்களும், அஞ்சல் வாக்குகளை எண்ணுவதற்காக 14 வாக்கெண்ணும் நிலையங்களுமாக மத்திய கல்லூரியில் 55 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு வாக்கெண்ணும் நிலையங்களின் பெறுபேறுகளையும் செவ்வை பார்ப்பதே பிரதான பணியாகும் என்பதால், நியமிக்கப்பட்ட அலுவலர்களின் பங்களிப்பானது காத்திரமானதுடன் மிகவும் வினைத்திறனாகவும் இருத்தல் வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி நிர்வாக மாவட்டங்களின் பெறுபேறுகளையும் தொகுத்து யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் இறுதிப் பெறுபேற்றினை வெளியிட வேண்டிய பணியாகவிருப்பதனால், அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு நீதியாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடைபெற ஒத்துழைப்பினை நல்குமாறு தெரிவத்தாட்சி அலுவலர் கேட்டுக்கொண்டார்.
இச் செயலமர்வில் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் திரு. இ.கி.அமல்ராஜ் அவர்களால் இக்கடமையில் ஈடுபடவுள்ள உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் அலுவலர்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.