முன்னிலையில் இருக்கும் மாவட்டங்கள்! பட்டியலிடும் ரணில் தரப்பு
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்ரமசிங்க 22 மாவட்டங்களில் முன்னிலையில் இருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கணக்கெடுப்புக்கள்..
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
160 தேர்தல் தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் ஒருங்கிணைப்பாளர்களால் 3 நாட்களுக்கொருமுறை கணக்கெடுப்புக்கள் நடத்தப்படும்.
அதற்கமைய இன்று காலை 8.30க்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய 22 மாவட்டங்களில் நாம் முன்னிலையிலிருக்கின்றோம். அதற்கமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிககூடிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
ஜனாதிபதி முறைமை இல்லாதிருந்திருந்தால் 1980களில் நாட்டின் நிலைமை மிக மோசமடைந்திருக்கும். விடுதலைப் புலிகளின் யுத்தமும் நிறைவடைந்திருக்காது. 2022இல் இடம்பெற்ற காலி முகத்திடல் போராட்டமும் இன்னும் நிறைவடைந்திருக்காது.
எனவே மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஒரு தலைவருக்கே வாக்குகள் வழங்கப்பட வேண்டும் என்பதை நினைவுபடுத்துகின்றோம்.
சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படுவோம் என்றும், அதில் சில திருத்தங்களை மேற்கொள்வோம் என்றும் தற்போது கூறும் சஜித் பிரேமதாசவும், அநுரகுமார திஸாநாயக்கவும் அன்று நாடாளுமன்றத்தில் அதனை எதிர்த்தனர்.
ஆனால் அவர்களது கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொருளாதார நிபுணர்களும், பேராசியர்களும் அதற்கு முரணான கருத்துக்களையே கூறுகின்றனர். அவ்வாறெனில் ரணில் விக்ரமசிங்கவின் தீர்மானம் சரியானது.
எனவே ஜனாதிபதி பதவியில் மாற்றம் ஏற்பட்டால் இதுவரை முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் அனைத்தும் சீர்குலையும்.
2015இல் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது நான் கூட்டணியின் செயலாளராக செயற்பட்டேன். வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டோம். மைத்திரிபால சிறிசேன அன்னம் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மக்களுக்கு பழக்கமில்லாத சின்னத்தில் போட்டியிட்டாலும் அவர் வெற்றி பெற்றார்.
2015இல் எமது தரப்பு தேர்தலுக்காக செலவிட்டதைப் போன்று எந்த தேர்தலிலும் செலவிடவில்லை. ஆனால் இறுதியில் அன்னம் வெற்றி பெற்றது. அதே போன்று தான் தற்போது செலவிடும் கட்சியின் நிலைமையும் காணப்படுகிறது.
வெளிநாடுகளிலிருந்து வாக்களிப்பதற்கு இலட்சக் கணக்கானோர் வருவதாகக் கூறினாலும் இதுவரை 100 பேர் கூட வரவில்லை. எனவே இவர்கள் எதிர்பார்ப்பது இடம்பெறாவிட்டால், அவர்கள் எவ்வாறு செயற்படுவார்கள் என்பதும் பிரச்சினைக்குரியதாகும்.
குழந்தைகளும் இன்று வாக்கு கோருகின்றனர். எனவே அவர்களுக்கு வாக்களித்து உங்கள் வாக்குகளை வீணடிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.