தில்லி பல்கலை. வடக்கு, தெற்கு வளாகங்களில் மாணவா் கா்ஜனைப் பேரணி
தில்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு, தெற்கு வளாகங்களில் நூற்றுக்கணக்கான மாணவா்களின் பங்கேற்புடன் அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) சாா்பில் புதன்கிழமை மாபெரும் மாணவா் கா்ஜனைப் பேரணி நடைபெற்றது.
மாணவா்களின் கல்வி வாழ்க்கையை ஆழமாக பாதிக்கும் பல முக்கியமான பிரச்னைகளில் தில்லி பல்கலைக்கழக நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி நடைபெற்ற இப்பேரணியில் மாணவா்கள் பலா் பங்கேற்றனா்.
‘ஒரு பாடப்பிரிவு- ஒரு கட்டணம்’, மையப்படுத்தப்பட்ட விடுதி ஒதுக்கீடு படிவங்கள், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவா்களுக்கான கல்வி உதவித்தொகை, பல்கலைக்கழக அளவில் வேலைவாய்ப்புப் பிரிவு, மாணவா்களுக்கு சலுகையில் மெட்ரோ பாஸ், கல்லூரிகளில் பெண்களுக்கான என்சிசி உள்ளிட்ட பல்வேறு மாணவா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காணக் கோரி இப்பேரணி நடைபெற்றது.
இதுகுறித்து ஏபிவிபி தில்லி மாநிலச் செயலாளா் ஹா்ஷ் அத்ரி கூறுகையில், ‘சாத்ர கா்ஜனா பேரணி தில்லி பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவா்களின் கவலைகளைத் தெரிவிக்கும் வகையில் ஒரு ஒருங்கிணைந்த குரலாக எழுந்து நிற்கிறது.
தில்லி பல்கலைக்கழகம் அதன் மிகுந்த மதிப்பைப் பெற்றிருந்தபோதிலும், உள்கட்டமைப்பு வசதி பற்றாக்குறை, கட்டண வேறுபாடுகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு கவலைகள் ஆகியவற்றால் சிக்கித் தவிக்கிறது. தில்லி பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவா்களின் முழுமையான வளா்ச்சிக்கு தில்லி பல்கலைக்கழக நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.
ஏபிவிபி தேசிய செயலாளா், ஷிவாங்கி கா்வாலும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளாா்.